வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்புகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய அரசு 1999ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு மற்றும் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது. அந்தச் சட்டம் 2003 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
ஓரிடத்தில் விளையும் பொருட்கள் அல்லது தயாரிக்கக்கூடிய பொருட்களின் தரம் ஆகியவற்றின் தனித்தன்மை அறிந்தே புவிசார் குறியீடு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த பொருளின் பிறப்பிடத்தை அறியவும் புவிசார் குறியீடு உதவுகிறது.
புவிசார் குறியீடினை பெற்ற பொருளை, வேறு யாரும் வியாபார நோக்கத்துக்காகவோ, போலியாகவோ பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக தடுக்க இயலும். தமிழகத்தில் ஏற்கெனவே காஞ்சீபுரம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, மதுரை மல்லி, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என 43 பொருட்கள்/தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் புகழ்பெற்ற வேலூர் முள்ளு கத்தரிக்காய் மற்றும் ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்புகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. புதிய சேர்க்கையின் அடிப்படையில் இந்தியா அளவில் அதிக புவிசார் குறியீடுகளை பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 46 புவிசார் குறியீடுகளுடன் கர்நாடக மாநிலம் முதலிடத்தில், 36 புவிசார் குறியீடுகளுடன் கேரளா மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முள்ளு கத்தரிக்காய்:
வேலூர் முள்ளு கத்தரிக்காய் என்பதை விட இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய் என்பது தான் புகழ்பெற்ற பெயர். முட்கள் நிறைந்த இது அரிய வகையான நாட்டு கத்தரிக்காய் ஆகும். இலவம்பாடி அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் அனைக்கட்டு, கணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, பேரணாம்பட்டு பகுதிகளிலும் இந்த வகை கத்தரி பெருமளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை எதிர்க்கும் தனி சக்தி இந்த கத்தரிக்கு உண்டு. கத்தரியை தவிர, செடியின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் முட்கள், பயிரை மிகவும் தனித்துவமாகவும், அடையாளம் காணக்கூடியதாகவும் ஆக்குகின்றன. கத்தரி மென்மையாகவும், சதைப்பற்றுள்ளதாகவும் உள்ளது. புரதம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ள இந்த கத்தரியின் சுவை மற்ற கத்தரியை விட அதிகம். ஒரு ஹெக்டேருக்கு 40 முதல் 45 டன்கள் வரை மகசூல் தரும் என்பதால் விவசாயிகளுக்கு லாபத்தை வழங்கும் பயிராகவும் கருதப்படுகிறது.
முண்டு மிளகாய்:
தென்னிந்திய மக்கள் காரத்தன்மையுடன் உணவினை உட்கொள்வதினை பெரிதும் விரும்புவார்கள். அந்த வகையில், ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு தனிச்சிறப்பு தென்னிந்திய மக்களிடையே உள்ளது. உருவத்தில் சிறியதாகவும், உருண்டை வடிவிலும் காணப்படும் இந்த மிளகாய் ராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மிளகாய் தமிழகம் மட்டுமின்றி இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலவம்பாடி கத்தரி, மற்றும் முண்டு மிளகாய் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நடப்பாண்டு புவிசார் குறியீடு பெற தேனி பன்னீர் திராட்சை, கடலூர் முந்திரிப்பருப்பு, சேலம் ஜவ்வரிசி, கன்னியாகுமரி மயிலாடி கற்சிற்பம் உள்ளிட்டவையும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:
Share your comments