கோடைகாலம் தொடங்கவுள்ள நிலையில், வெயில் சுட்டெரிப்பதால் நாகையில் தர்பூசணி (Watermelon) விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. சுட்டெரிக்கும் வெயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து உருவான புயல்களாலும் நாகை மாவட்டத்தில் தொடர் கனமழையால் நெற்பயிர்கள் (Paddy Crops) சேதம் அடைந்தன. மழை நின்ற பிறகு கடும் பனி பொழிவு காணப்பட்டது. இதனால் பகலிலும் வாகனங்களில் முகப்பு விளக்கு எரியவிட்டு சென்றனர்.
கோடைக்காலம் (Summer) தொடங்குவதற்கு முன்பே நாகையில் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் பொதுமக்கள் மதிய வேளையில் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். பகலில் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்படுகிறது.
கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
தர்பூசணி விற்பனை
வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் இளநீர், தர்பூசணி (Watermelon), சர்பத், ஐஸ் மோர், கரும்பு ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்களை விரும்பி பருகி வருகின்றனர். இதனால் நாகை பகுதிகளுக்கு தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. நாகை புதிய, பழைய பஸ் நிலையங்கள், நீலா வீதிகள், பப்ளிக் ஆபிஸ் சாலை, நாகூர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் தர்பூசணி விற்பனை (Watermelon sales) படுஜோராக நடைபெற்று வருகிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் சாலையில் செல்வோர் அதிகளவில் தர்பூசணி கடைகளுக்கு சென்று பழங்களை சாப்பிட்டும், வீட்டிற்கு வாங்கியும் செல்கின்றனர். இதனால் தர்பூசணி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது.
கிலோ ரூ.20
திண்டிவனம், மரக்காணம், நடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் தர்பூசணி சாகுபடி (Watermelon Cultivation) செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தமாக தர்பூசணியை வாங்கி, லாரியின் மூலம் நாகை பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறோம். இந்த ஆண்டு ஒரு டன் தர்பூசணி ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கொள்முதல் (Purchase) செய்து வருகிறோம். இந்த பழங்கள் 3 கிலோ முதல் 15 கிலோ வரை உள்ளன. தர்பூசணி கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்கிறோம். வரும் காலங்களில் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தர்பூசணி வியாபாரி ஒருவர் கூறினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பால் பண்ணையை வெற்றிகரமாக நடத்த இந்த 5 சோதனைகளை செய்தே ஆக வேண்டும்!
Share your comments