மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்த கருத்து தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
சமீபத்தில் நிறைவடைந்த கர்நாடக தேர்தலில், பெரும்பான்மையான இடங்களை வென்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைத்தது. முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்ற நிலையில் துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்றார். அவருக்கு அமைச்சரவையில் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டுவது எங்களது உரிமை. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணமெல்லாம் இல்லை. அணை கட்டுவதற்கான பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இச்செய்தி தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் களத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பிரதான கட்சிகள் அனைத்து கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சரின் கருத்துக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
இதையொட்டி, தற்போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
திருச்சி, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பகுதிகளை ஆய்வு செய்த பிறகு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது,
"விவசாயிகளின் உரிமைகளை விட்டுக் கொடுக்காத அரசாக திமுக அரசு செயல்படும். விவசாயிகளுக்கு அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்றன. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம். வீட்டு மின் இணைப்பு கட்டணத்தில் எந்த உயர்வும் இல்லை" என்றார்.
தமிழகத்திலுள்ள காங்கிரஸ் கட்சியும், கர்நாடக காங்கிரஸ் அமைச்சரின் கருத்துக்கு தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர். முன்னதாக கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்த போதும் மேகதாது பிரச்சினை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
சிவக்குமார் அதிரடியான நடவடிக்கைகள் பெயர் பெற்றவர் என்பதால் இப்பிரச்சினை இரு மாநிலங்களுக்கு இடையே மோதலை உண்டாக்காமல் இருந்தால் அனைத்து தரப்பினருக்கும் நல்லது என சமூக நல ஆர்வலர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க
Share your comments