நடப்பாண்டிற்கான (2023-2024) வேளாண் பட்ஜெட்டில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் MGNREGS திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு-
தமிழக சட்டப்பேரவையில் நடப்பாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவிடும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் குறித்த அறிவிப்பினை அமைச்சர் வெளியிட்டார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (MGNREGS)
வரும் ஆண்டில், 6,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இயற்கை வள மேலாண்மைப் (NRM) பணிகளான தடுப்பணை, பண்ணைக் குட்டைகள், கசிவு நீர்க்குட்டைகள், புதிய குளங்கள், கால்வாய்களைத் தூர்வாருதல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பணிகள், கல் வரப்பு, மண் வரப்பு, தனிநபர் கிணறு, சமுதாயக் கிணறு, பால் சேகரிப்பு மையம், உணவு தானியக் கிடங்கு, தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிட 19,400 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
விவசாய விளைபொருட்களை விவசாயிகளின் வயல்களில் இருந்து அருகிலுள்ள சந்தைக்குக் கொண்டு செல்வதை மேம்படுத்துவதற்காகவும், வேளாண்மைக்கு இயந்திரங்களைக் கொண்டு செல்வதற்காகவும் வரும் ஆண்டில் 710 கோடி ரூபாய் செலவில் கிராமப் பஞ்சாயத்துகளில் 2,750 கிலோமீட்டர் நீளத்திற்கு ஊரகச் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் ஆண்டில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-2 ல் 368 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம், சேமிப்புக் கிடங்கு, பால் சேகரிப்பு மையம், சிறு பாசனத் தொட்டிகள், குளங்கள், ஊருணிகளின் புத்தாக்கம், புனரமைப்பு ஆகியவற்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம்:
வரும் ஆண்டில், சிறுதானியப் பயிர்கள் சாகுபடி, மதிப்புக்கூட்டுதல், பயன்பாட்டினை அதிகரிக்கும் வகையில், சுய உதவி குழு உறுப்பினர்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் 40 சிறுதானிய தொகுப்புகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் நிதி உதவி தந்து ஊக்குவிப்பதற்காக, அரசு 40 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கும். மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் 'மதி-பூமாலை' வளாகத்திலும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக, சிறுதானிய சிற்றுண்டி உணவகம் (Mlist Cafe) உருவாக்கப்படும்.
குடும்ப வருமானத்தை உயர்த்தும் வகையில், அந்தந்த பகுதியில் கிடைக்கும் இயற்கை வள ஆதாரங்களை உரிய முறையில் பாதுகாத்து, ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டில் தலா 40 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் வகையில் 44 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். அங்ககத் தேன் உற்பத்தி, மூலிகைத் தோட்டம் அமைத்தல் ஆகியவை கிராமப்புறங்களில் முக்கியமான வாழ்வாதாரப் பணிகளாக விளங்கி வருகின்றன.
சுய உதவிக் குழுக்கள் இடையே தேன் உற்பத்தி, மதிப்புக்கூட்டுதல் போன்ற பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்து "மதி" என்னும் வணிகக் குறியீட்டில் விற்பனை செய்வதற்காக தமிழ்நாடு மாநில கிராமப்புர வாழ்வாதார இயக்கம், தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையுடன் இணைந்து பணியாற்றும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
தண்ணீர் பாய்ச்சுற கவலை இனி வேண்டாம்.. கல்லூரி மாணவர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு
கல்வித்துறையுடன் கைக்கோர்க்கும் வேளாண் துறை- பள்ளி மாணவர்களுக்காக புதுத்திட்டம்
Share your comments