உலகிலேயே நிலக்கரி அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் சீனாவிற்கு அடுத்தப் படியாக இந்தியா உள்ளது. இந்தியா தனக்குத் தேவைப்படும் மின்சாரத்தின் அளவில் 75% சதவீத மின்சாரத்தை நிலக்கரியிலிருந்து எடுத்துப் பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் உள்நாட்டு மின்உற்பத்தி நிலையங்களில் சராசரி நிலக்கரி இருப்பு அளவு ஏப்ரல் 17-ஆம் தேதி நிலவரப்படி 173 மின்சார ஆலைகளில் 101 ஆலைகளில் நிலக்கரி கையிருப்பு மிக மோசமான அளவில் உள்ளதாகத் தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியில் 80% நிலக்கரி இந்தியாவின் அரசு நிறுவனமான கோல் இந்தியா கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் தற்போது நிலக்கரி தேவையின் அளவு 27%-ஆக அதிகரித்துள்ளது.
கடுமையான வெயில் மற்றும் ஏர் கண்டீஷனர் உபயோகம் ஆகியவற்றால் மின்சாரத் தேவை அதிகரித்து உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவின் அதிகபட்ச மின் தேவை என்பது 182.37 ஜிகாவாட் எனற அளவில் இருந்து 200 ஜிகாவாட் ஆக அதிகரித்து வருவதாக வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். வருங்கால மின்வெட்டு நிலைகளைக் கருத்தில் கொண்டு கோல் இந்தியா நிறுவனம் ஏன் நிலக்கரி உற்பத்தியைத் தேவையான அளவில் செய்து முடித்துக் கையிறுப்பில் வைக்கவில்லை எனவும் பேசப்பட்டு வருகின்றது.
மத்திய அரசின் அறிக்கையின்படி, மின் உற்பத்தி நிலையங்கள் சராசரியாக 24 நாட்கள் என்ற அளவுக்கு நிலக்கரி இருப்பை வைத்திருக்க வேண்டும். சில ஆண்டு முன்பு வரை இறக்குமதி நிலக்கரியை இந்தியா அதிகமாகச் சார்ந்து இருந்த நிலையில், கடந்த ஆண்டு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை அதிகரித்ததால் பெரும்பாலான நிறுவனங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியைச் சார்ந்து செயல்படும் நிலை வந்ததாகவும், இதனால் இறக்குமதியில் 12% சரிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜார்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்கம், பீகார், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெய்த கனமழை மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்ற காரணத்தினால் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி வெகுவாகக் குறைந்தது என்றும் தகவல்கள் கூறப்படுகின்றன. அதே நேரத்தில் கோல் இந்தியா நிறுவனம் இந்தியாவின் மின் தேவையைக் கருத்தில் கொண்டு பாக்கிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும், பிற நிறுவனங்களுக்கான மின் சேவை சப்ளை செய்வதை நிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாக்கிஸ்தானும் மின்நெருக்கடியில் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் நிலக்கரி தட்டுப்பாட்டிற்கு இரஷ்ய-உக்ரைன் போர் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. இரஷ்யாவிடமிருந்து இந்தியாவிற்கு நிலக்கரி தேவையில் 12%-ஐ இரஷ்யா கொடுத்து வந்த நிலையில் தற்போது அங்கு நடந்து வரும் போரினால், இந்தியாவிற்கு நிலக்கரி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதாவது, அடுத்த 30 நாட்களுக்குத் தேவையான அளவிற்கு நிலக்கரி இருப்பில் இருப்பதாகவும், கோல் இந்தியா நிறுவனத்திடம் மட்டும் 72.5 மில்லியன் டன் நிலக்கரி இருப்பில் இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவிக்கிறது. இது குறித்துத் தகவல் தெரிவித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நிலக்கரி தட்டுப்பாட்டால் தமிழகத்திற்குப் பாதிப்பு இல்லை எனக் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
TCS 2022: TCS பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்! முன் அனுபவம் தேவையில்லை!!
100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் ஃபெர்டிகுளோபல் டிரான்ஸ்ஃபார்மிங் உர உற்பத்தி
Share your comments