ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் ”மகளிர் உரிமைத்தொகை திட்டம்” செயல்படுத்தப்படும் என குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக அரசின் நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்-15 முதல் தொடங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார். எந்த வகையான பெண்கள் இத்திட்டத்தில் பயனடைவார்கள் என்கிற கேள்வியினை எதிர்க்கட்சி தலைவர்கள் எழுப்பினர். தகுதிவாய்ந்த பெண்களை இத்திட்டத்தில் எப்படி தேர்ந்தெடுப்பீர்கள் என அடுக்கடுக்கணக்கான கேள்விகள் சமூக வலைத்தளத்தில் எழுந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து சட்டமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவற்றின் சுருக்கமான விவரம் பின்வருமாறு-
“மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக ஒரு நீண்ட விளக்கத்தை தர விரும்புகிறேன், மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக 7000 கோடி இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, யார் யாருக்கெல்லாம் கிடைக்கும், கிடைக்காது என எல்லோரும் மனக்கணக்கு போட்டுக் கொண்டு வருகிறார்கள்.
மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது.
அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும்.
மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது, தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள்.
இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதனைச் செய்ய முடியுமா? இதற்கு நிதி இருக்குமா என்றெல்லாம், கேள்விகளை எழுப்பி, எங்கே திராவிட முன்னேற்றக் கழக அரசு இதனைச் செய்துவிடுமோ என்ற தங்கள் அச்சத்தை பல்வேறு வகைகளிலே வெளிப்படுத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதி திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, வரலாற்றில் விளங்கவுள்ள, இந்த மகத்தான ‘மகளிர் உரிமைத் தொகை' வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மேலும் காண்க:
பிண்றீங்களே..நீங்க வேற லெவல்- நிலக்கடலை விவசாயியை பாராட்டிய இறையன்பு ஐஏஎஸ்
Share your comments