விவசாயத்தினைப் பெருக்குவதற்கும், தொடர்ந்து சிறப்புற விவசாயத்தினை நடத்துவதற்கும் மூலமாக இயந்திரப்பொருட்கள் என்பவை அவசியம். அதிலும் குறிப்பாக வேளாண் இயந்திரங்கள் என்பவை அவசியமான ஒன்றாகும். அத்தகைய வேளாண் கருவிகளில் ஒன்றான நெல் அறுவடை இயந்திரத்திற்கான மானியத்தை எவ்வாறு பெறுவது என்பதைக் குறித்துதான் இப்பதிவு விளக்குகிறது.
விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்து வருகின்றன. அதிலும் எண்ணற்ற மானியங்களை வழங்குகின்றன. அத்தகைய மானியங்களுள் நெல்லை அறுவடை செய்யும் இயந்திரத்திற்கான மானியம் எவ்வாறு பெறுவது? என்ற முழு தகவல்களை இங்குப் பார்க்கலாம்.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் உள்ள விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பெற மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின்கீழ் பல்வேறு விவசாய இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன. அந்த நிலையில், நெல் அறுவடை இயந்திரம் என்று அழைக்கப்படுகின்ற கதிரடிப்பானுக்கு நாற்பது முதல் ஐம்பது சதவீத மானியம் என்பது வழங்கப்படுகிறது.
இந்த கதிரடிக்கும் இயந்திரம் கொண்டு சோளம், நெல், பார்லி, மக்காச்சோளம் முதலான பல வகை பயிர்களைக் கதிரடிக்கலாம். சிறு, குறு விவசாயிகள், பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கும் 50% மானியம் அல்லது ரூ.1 லட்சம் வரை மானியமும், இதர பிற பிரிவைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 40% மானியம் அல்லது ரூ.80,000 வரை மானியமும் வழங்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்
புகைப்படம் 2
ஆதார் அட்டை
குடும்ப அட்டை
சிறு, குறு விவசாயச் சான்று
சாதிச் சான்று
நிலத்தின் பட்டா
நிலத்தின் சிட்டா
நில அடங்கல்
செயல்முறை என்று பார்க்கும்பொழுது விவசாயிகளின் விபரங்கள் வேளாண்மை பொறியியல் துறையின் பதிவேட்டில் பதிவு செய்யப்படும்.
துறையிலிருந்து அனுமதி கடிதம் கிடைக்கப்பெற்ற பின் கருவிகள், இயந்திரங்களின் முழுதொகை குறித்த விவரங்களை வரைவோலையின் மூலம் கொடுக்க வேண்டும். இயந்திரம் பெற்ற பின் வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்களால் உறுதி செய்யப்பட்டு அதன் பின் இயந்திரத்திக்கான தொகை விவசாயியின் வங்கி கணக்கில் அனுப்பப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
தமிழக அரசின் உழவன் செயலியில் விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை உள்ளிட்டு முதலில் பதிவு செய்ய வேண்டும். அதன் பின் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் www.agrimachinery.nic.in என்ற இணையதளத்தில் இணைக்கப்பட்டு செயல்முறைக்கு அனுப்பப்படும். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.
மேலும் படிக்க
இதை செய்தால் உங்களுக்கு மாதம் ரூ.5000 கிடைக்கும்- முழு விபரம் உள்ளே!
வீடு கட்ட ரூ.2.5 லட்சம் மானியம் - உங்கள் பெயரை சரிபார்க்கும் விபரம் உள்ளே!
Share your comments