மணிப்பூரில் நடைபெறும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் விளையாட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்தரை ஹாக்கி மைதானத்தில் பயிற்சி பெற்று வரும் தமிழக மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் சந்தித்து பேசினார்.
12வது தேசிய சப்-ஜூனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி மணிப்பூர் மாநிலம் இம்பாலில் அடுத்த மாதம் 11 முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள தமிழ்நாடு வளர்ச்சி ஆணையத்துக்குச் சொந்தமான செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் தமிழகம் சார்பில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த 17ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
பயிற்சி முகாம் அடுத்த மாதம் 5ம் தேதி வரை நடக்கிறது. தலைமைப் பயிற்சியாளர் அன்பழகன், உதவிப் பயிற்சியாளர் ரஸ்னா ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். கடந்த 25ஆம் தேதி சிறப்புச் செய்தித் தொகுப்பாக இச்செய்தி தொகுப்பு வெளியிடப்பட்டது.
பயிற்சி பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பயிற்சி பெற்றவர்களை நேரில் சந்தித்து பயிற்சி குறித்து கேட்டறிந்தார். மேலும், போட்டியில் வெற்றி பெற்று தன்னம்பிக்கையுடன் பயிற்சி பெற்று மற்றும் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து விளையாட்டு வீரர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார். அப்போது செயற்கை புல் மைதானத்துடன் இணைக்கப்பட்டுள்ள விளையாட்டு விடுதிக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் விளையாட்டு விடுதியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு குடிநீர், மின்சாரம், இருப்பிடம் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மைதானம் மற்றும் தங்கும் விடுதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
தொடர்ந்து, கோவில்பட்டி நகராட்சி சார்பில் ராமசாமிதாஸ் பூங்காவில் நடைபெற்று வரும் அறிவுசார் மையப் பணிகள் மற்றும் காந்திநகர்-நடராஜபுரம் மயானத்துக்கு சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டார்.
கோட்டாட்சியர் சங்கரநாராயணன், நகர்மன்றத் தலைவர் கே.கருணாநிதி, தாசில்தார் சுசீலா, சமூக நலத் திட்ட தாசில்தார் மணிகண்டன், நகராட்சி ஆணையர் ராஜாராம், மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் படிக்க:
டோக்கியோவில் தொடங்கியது ஒலிம்பிக்: இந்தியா சார்பில் 125 பேர் பங்கேற்பு!
41 ஆண்டுகளுக்குப் பின் ஹாக்கியில் பதக்கம்! இந்திய ஆடவர் அணி அசத்தல்!
Share your comments