நிலத்தை உழுவதற்கு காளை மாடுகளுக்கு மாற்றாக டிராக்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர் பெரும்பாலான விவசாயிகள். இருப்பினும் சிறு,குறு விவசாயிகள் சொந்தமாக டிராக்டர் வாங்க சிரமமடைந்து வரும் நிலையில் சூரிய சக்தியில் இயங்கும் மினி டிராக்டரை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் சன்னபசப்பா.
விவசாயத் துறையானது கூலி வேலைக்கு ஆள் கிடைக்காதது போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், இத்துறையில் நுழையும் விவசாயிகள், குறிப்பாக இளைஞர்கள் புதிய தொழில்நுட்பங்களை வேளாண் துறையில் உட்புகுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மரபு சாரா எரிசக்தியில் முதன்மையாக இருப்பது சூரிய சக்தி. அவற்றினை பயன்படுத்தி இயங்கும் வகையில் ஒரு மினி டிராக்டரை உருவாக்கியுள்ளார் சித்தவ்வனதுர்கா கிராமத்திலுள்ள விவசாயி சிவண்ணாவின் மகன் சன்னபசப்பா. சூரிய சக்தியில் இயங்கும் மினி டிராக்டர்களைப் பயன்படுத்தி, தனது வயலில் பல்வேறு பயிர்களை வெற்றிகரமாக பயிரிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக நிலத்தை உழுவதற்குப் காளைகளை பயன்படுத்தி வந்தார். தற்போது அதற்கு மாற்றாக இந்த டிராக்டரைப் பயன்படுத்துகிறார், இதன் மூலம் ஏராளமான பணத்தையும், வேளாண் தொழிலில் ஈடுபடும் நேரத்தையும் மிச்சப்படுத்தியுள்ளார். சூரிய சக்தியில் இயங்கும் இந்த மினி டிராக்டர் தற்போது அவரது சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்களின் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
ராகி, சிறிய தினை மற்றும் அதிகமாக வளராத பிற பயிர்களை பயிரிடுவதற்காக அவர் டிராக்டரைப் பயன்படுத்துகிறார். சூரிய சக்தியில் இயங்கும் இந்த மினி டிராக்டர், பாரம்பரிய சாகுபடியில் பயன்படுத்தப்படும் காளைகளுக்கு மாற்றாக ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் சுமார் 8 மணி நேரம் தடையின்றி இயங்கும் என்கிறார் அதன் வடிவமைப்பாளர் சன்னபசப்பா.
சூரிய சக்தியில் இயங்கும் இந்த மினி டிராக்டரை உருவாக்கும் செலவில் SELCO அறக்கட்டளை ரூ. 2.09 லட்சத்தையும், சன்னபசப்பா உபகரணங்களின் விலையாக ரூ.65,000-ஐயும் பங்கீட்டு தயாரித்து உள்ளனர்.
இந்த டிராக்டரை இயக்குவது என்பது இலகுவானது மற்றும் எந்த வகை வயல் பரப்பிலும் இதனை எளிதில் கொண்டு செல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளார் சன்னபசப்பா. சொந்தமாக டிராக்டர் இல்லாத விவசாயிகள், வேளாண் பணிக்காக டிராக்டரினை வாடகைக்கு எடுக்கின்றனர். அதற்கான டீசல் செலவு என விவாசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார சுமையினை குறைக்கும் வகையில் இந்த மினி டிராக்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
தனது கண்டுபிடிப்பு குறித்து விவசாயி சன்னபசப்பா பேசுகையில், ''உலகமே முன்னேறி வரும் நேரத்தில், விவசாயத் துறையும் முன்னேற வேண்டும். விவசாயத்தில் இயந்திரமயமாக்கலில் பயன்படுத்தப்படும் புதைபடிவ எரிபொருளுக்கு மாற்றாக சூரிய ஆற்றல் உள்ளது. அதனை உரிய முறையில் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கினை குறைப்பது நமது அனைவரின் பொறுப்பு” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காண்க:
நீர்வளத்துறைக்கு முதல்வர் வழங்கிய DGPS கருவி- இதனால் இவ்வளவு பயனா?
காட்டு யானை குறித்த அறிக்கை- முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி
Share your comments