ஆடுகளுக்கு பாரம்பரிய மருத்துவ குணம் நிறைந்த முருங்கைக்காய், கடுகுரோகிணி போன்றவற்றை உணவுடன் கலந்துகொடுப்பது, அவற்றின் ஜீரணக் கோளாறை சரிசெய்ய உதவும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் ஆடு வளர்ப்பு பெரும் பங்கு வகிக்கிறது. குறைந்த எண்ணிக்கையில் ஆடுகளை வளர்த்து அதன் மூலம் வருவாய் பெறும் நிலை பெருமளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
வளர்ப்பு ஆடு, மாடுகளில் நோய் தாக்கம் ஏற்படும் போது, சிறு பண்ணையாளர்கள் நவீன மருத்துவ முறைகள் மற்றும் மருந்து பொருட்களைக் கொடுக்கும்போது, அவர்களுக்கு அதிக பொருட்செலவு ஏற்படுகிறது.
அதேநேரத்தில் இதனைத் தடுக்க ஏதுவாக, கால்நடை வளர்ப்போர் தாங்களாகவே ஆண்டிபயாடிக்(Antibiotic) எனப்படும் எதிருயிரி மருந்துகளை பயன்படுத்துவதால் உயிர் கொல்லி எதிர்ப்பை உண்டாக்கும். அதாவது மருந்துகள் நோய் எதிர்ப்பு தன்மையை இழந்து விடுகின்றன. உணவு பயன்பாட்டிற்காக பராமரிக்கப்படும் கால்நடைகளில் உபயோகப்படுத்தப்படும் ஒவ்வொரு மருந்திற்கும் வித்டிராயல் பிரீயட் எனப்படும் விலக்கு காலம் கண்டிப்பாக அளிக்க வேண்டும்.
ஆய்வில் தகவல் (Research Find out)
இந்நிலையில் ஆடுகளுக்கு அடிக்கடி ஏற்படும் அஜீரணக் கோளாறுக்கு மருத்துவத் தன்மை கொண்ட முருங்கைக்காய் மற்றும் மூலிகை வகையைச் சேர்ந்த கடுகுரோகிணியை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம் என்பது இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவை ஆடுகளின் ஜீரணத்தன்மையை அதிகரிப்பதுடன், அவற்றுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அதிகளவில் தருகின்றன. முருங்கைக்காய் மற்றும் அதன் கீரைகள், ஆடுகளுக்கு உணவாக வழங்கப்படும்போது அவற்றின் உடலில் புரதச்சத்து உற்பத்தி அதிகரிக்கிறது.உணவில் உள்ள அனைத்துச் சாறுகளையும் ஆடுகளால் உறிஞ்சி எடுக்க முடியாது. ஏனெனில், வயிற்றில் உள்ள நுண்ணுயிர்களால் ஏற்படும் நொதித்தல் இதற்கு இடமளிப்பதில்லை.
இந்த முருங்கைக்காய் வயிற்றில் வாயு உற்பத்தி, ஃபேட்டி அமிலங்கள் மற்றும் அமோனியா உருவாதைக் குறைக்கிறது. இதேபோல், கடுகுரோகிணி புரதங்களின் சிதைவைக் குறைக்கிறது.
இத்தகைய மூலிகை மருத்துவம் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
மூலிகை மருத்துவம் மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
முக்கிய வழிமுறைகள்
பயன்படுத்தும் தாவரம் நச்சுத் தன்மை இல்லாதவை என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சில மருந்துகளை புகட்டும் போது பனைவெல்லம் சேர்த்து பிசைந்து நாக்கின் மேல் சிறிது சிறிதாக தடவி உள்ளே புகட்ட வேண்டும்.
கால்நடைகளின் இருப்பிடத்தை (கட்டுத்தரை) சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வாரம் ஒரு முறை கட்டுத்தரையில் வசம்பு, மஞ்சள், பூண்டு ஊற வைத்து சுண்ணாம்பு நீர் கலந்து தெளித்து விட வேண்டும்.
கால்நடைகளுக்கு ஏற்ற எளிய முதலுதவி மூலிகை செடிகளை வீட்டில் வளர்த்து கால்நடைகளுக்கு எளிய மருத்துவ உதவி கிடைக்க செய்யலாம்.
மேலும் படிக்க:
மழைக் காலத்திற்கு ஏற்ப பாத பராமரிப்பு - நோய்களையும் தவிர்த்திடலாம்!
இனி தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி, இந்நாளாகவும் கொண்டாடப்படும்!
Share your comments