பச்சிளம் குழந்தைக்கும் பசுமாட்டுப்பாலைத் துணிந்து கொடுத்து வளர்ப்பது தமிழக தாய்மார்களின் நம்பிக்கை. ஏனெனில் தாய்பாலுக்கு இணையானச் சத்துக்கள் நிறைந்தது பசும்பால்.
அத்தகைய சத்துக்களை அளிக்க மாடுகளுக்கு நாம் அளிக்க வேண்டிய தீவனங்கள் எவை என்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா? விபரம் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
பாலில் உள்ள சத்துக்கள் (Nutrients in milk)
பொதுவாகப் பாலில் தண்ணீர், கொழுப்பு, புரதம், சர்க்கரை, சாம்பல் சத்து ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் புரதம், சாம்பல் சத்து, சர்க்கரை ஆகியவை கொழுப்பற்ற திடப்பொருட்கள் ஆகும்.
இவற்றை தவிர கொழுப்பின் அளவைக்கொண்டு பாலுக்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது.
பொதுவாக, பசும்பாலில் 3.5 சதவீதம் கொழுப்பும், 8.5 சதவீதம் கொழுப்பற்ற திடப்பொருட்களும் இருக்க வேண்டும்.
எனவே பாலில் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை சில வழிகளில் அதிகரிக்கலாம்.
அவ்வாறு கொழுப்பற்ற திடப்பொருளை அதிகரிக்க வழிகள்:
-
1 லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் கலப்புத் தீவனம் கொடுக்கலாம்.
-
கலப்புத் தீவனத்தில் மாவுச்சத்துக்களின் அளவை அதிகரிக்கும் நிலையில் பாலில் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும்.
-
மடியில் பாலை சேர விடக்கூடாது. சினை மாடுகளுக்கு 8 மாத சினைக்காலம் முதல் 2 கிலோ அடர்தீவனம் கொடுத்தால் பாலின் உற்பத்தியும், கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும்.
கொழுப்பு சத்து (fat)
-
சில மாடுகளின் பாலில் குறைந்த அளவு கொழுப்புச் சத்து இருப்பது அதன் மரபு பண்பாக இருந்தால், அதை நாம் மாற்ற முடியாது.
-
எரிசக்தி தீவனம் மற்றும் நார்ச்சத்து தீவனங்களை அளிப்பதன் மூலம், கொழுப்புச் சத்தை அதிகரிக்கலாம்.
எரிசக்தி தீவனம் (Energy fodder)
பொதுவாக, கன்று ஈன்றவுடன் பசுவின் உடலில் உள்ள கொழுப்பு சத்து, பால் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு விடுவதால் மாடுகளின் உடலில் கொழுப்பு சத்து குறைந்து மாடுகள் மிகவும் மெலிந்து இருக்கும்.
பாலில் கொழுப்பு அளவும் குறைவாக இருக்கும். இதுபோன்ற பாதிப்பை தடுக்க, மாடுகள் கன்று ஈனுவதற்கு 2 முதல் 3 வாரங்களுக்கு முன்பிருந்து மாடுகளுக்கு பருத்தி கொட்டை, சோயா, சூரியகாந்தி போன்ற எரிசக்தி மிகுந்த தீவனங்களை அளிக்க வேண்டும்.
மாடுகள் கறவையில் உள்ள போது கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற எரிசக்தி மிகுந்த தானியங்களை தரவேண்டும்.
கலப்பு தீவனத்தில் 33 சதவீதம் புண்ணாக்கு, 30 சதவீதம் தவிடு, 1 சதவீதம் தாதுஉப்பு என்ற அளவில் கலந்து ஒவ்வொரு 3 லிட்டர் கறவைக்கும் 1 கிலோ கலப்பு தீவனம் என்ற அளவில் தர வேண்டும். இதன் மூலம் கறவை மாடுகளின் பாலில் கொழுப்பின் அளவை சீராக தக்க வைக்கலாம்.
நார்ச்சத்து (Fiber)
-
மாடுகளின் தீவனத்தில் நார்ச்சத்து குறைவாக இருந்தால் பாலில் கொழுப்பின் அளவும் குறையும்.
-
பாலில் கொழுப்பின் அளவை அதிகரிக்க ஒரு மாட்டிற்கு அன்றாடம் 15 கிலோ பசுந்தீவனம், 4 முதல் 5 கிலோ காய்ந்த தீவனம் அளிக்க வேண்டும்.
-
இதுதவிர கலப்பு தீவனத்தில் மக்காச்சோளம், கம்பு போன்ற தீவனங்கள் பெரிய அளவு துகள்களாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.
-
ஒரு மாட்டிற்கு 30 சதவீதம் என்ற அளவில் தாது உப்புக் கலவையை தீவனத்துடன் கலந்து அளித்தால் சத்து குறைபாடுகள் நீக்கப்படும்.
-
இத்துடன், ஒரு மாட்டிற்கு 15 முதல் 20 கிராம் அளவில் சோடா உப்பை தீவனத்தில் கலந்து கொடுக்கும்போது வயிற்றில் அமிலத் தன்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். இதனால் பாலில் கொழுப்பு அதிகமாகும்.
மேலும் படிக்க...
ஓஹோவென விற்பனையாகும் ஒட்டகப்பால்- லாபம் தரும் சிறந்த தொழில்!
மாட்டுச் சாணத்திற்கு Advance Booking- நம்ப முடிகிறதா!
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்!
Share your comments