முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தூக்குத் தண்டனை குறித்த வழக்கு, தேர்தலில் நடைமுறையில் இருக்கும் “நோட்டா” வசதி குறித்தும் தான் எதிர்க்கொண்ட வழக்குகளினை கையாண்ட விதத்தினையும் முன்னாள் CJI சதாசிவம் விவரித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் கீழ் உச்சபட்ச அதிகாரமிக்க பதவிகளுள் ஒன்றான உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், கேரள மாநிலத்தின் ஆளுநராகவும் பதவி வகித்தவர் சதாசிவம். இவர் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியுள்ள கிரிஷி ஜாக்ரான் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து KJ சாப்பலில் நடைப்பெற்ற நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தார். பத்திரிகையாளர்களுடன் உரையாடுகையில் தான் சந்தித்த வழக்குகளும், அதனை கையாண்ட விதம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு:
தமிழக அரசியலை புரட்டிப்போட்ட வழக்குகளில் முதன்மையானது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டணையை ரத்து செய்யக்கோரி வழக்கு நீதிபதி சதாசிவம் அடங்கிய அமர்வுக்கு வந்தது. பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு மூவரின் தூக்கு தண்டனையினை ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
தற்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடித்தளமாக அமைந்தது அன்று நீதிபதி சதாசிவம் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு தான்.
ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்பான வழக்கினை திறம்பட கையாண்டதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளை பெற்றார். 1993- ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் சிறையில் அடைக்கப்பட்டார். நாடு முழுவதும் உற்று நோக்கிய இவ்வழக்கில் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைத்து சதாசிவம் உத்தரவிட்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவனம்:
முன்னாள் நீதிபதி சதாசிவம் தான் கையாண்ட வழக்குகள் குறித்து பேசுகையில் ஒரு சுவாரஸ்ய சம்பவத்தினை எடுத்துரைத்தார்.
“நீதிமன்ற அறைக்குள் பார்வையற்ற வழக்கறிஞர் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கு ஒன்றுடன் வருகைத் தந்திருந்தார்”. இதனை விசாரித்த நீதிபதி சதாசிவம் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டை 3% லிருந்து 4% ஆக உயர்த்த உத்தரவிட்டார். அதைப்போல் ஒவ்வொரு அரசு கட்டிடமும் படிக்கட்டு மற்றும் லிஃப்ட் போன்றவற்றுடன் சாய்வுதள வசதி ஏற்படுத்த வேண்டும் என உறுதி செய்தார். இது மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது.
எம்.எல்.ஏ/எம்.பி-க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி விவகாரம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பட்டணை இணைத்தல், யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறிய (VVPAT) வசதி போன்றவை முன்னாள் நீதிபதி சதாசிவம் அவர்களால் திறம்பட கையாளப்பட்டு அதற்கு தீர்வு காணப்பட்டது.
பிரதமரின் பாராட்டு:
கேரள ஆளுநராகப் பணியாற்றிய போது, மாநிலத்தில் சிறப்பாகச் செயல்படும் பல்கலைக்கழகத்துக்கு 5 கோடி ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டார். இத்திட்டத்தினை பிரதமர் மோடி பாராட்டியதோடு அனைத்து மாநிலங்களில் உள்ள ஆளுநர்களும் இதனை கடைப்பிடிக்க கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த சதாசிவம், அரசுப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். அதன்பின் சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். 1973 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். 1996 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றார்.
அதன்பின்னர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்தார். 2007 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 40-வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
27 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டித்தீர்த்த கனமழை- சென்னை மக்கள் அவதி
Share your comments