காய்கறி மற்றும் பழங்களில் அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பைக் குறைக்க சேமிப்புக் கிடங்குக் கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆட்சியர் மெகராஜ் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
2020-21ம் ஆண்டில் பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக, காய்கறி மற்றும் பழங்களில் அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பு மற்றும் முழுஅடைப்பு காலக்கட்டத்தில் ஏற்படும் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழில்களின் மத்திய அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் பசுமை செயல்பாடு இயக்கத்தின் கீழ் கீழ்க்குறிப்பிட்டுள்ள குறுகிய கால அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
50 சதவீதம் மானியம்
இத்திட்டமானது வரும் 10.12.2020 வரை செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி விளைபொருட்களின் உற்பத்தி உபரியினை, உற்பத்தி செய்யும் இடங்களில் இருந்து விற்பனை பொருட்கள் குறைவாக இருக்கும் சந்தைகளுக்குக், கொண்டு செல்ல ஏற்படும் போக்குவரத்து செலவினத்தில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.
விளைபொருட்களை அதிகபட்சம் 3 மாத காலம் குளிர்பதன கிடங்கு உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் சேமிப்பதற்கான சேமிப்பு கட்டணத்தில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.
மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டு தெரிவு செய்யபட்ட காய்கறிகள் மற்றும் பழங்களின் விவரங்கள்:
பழங்கள் (Fruits)
மா, வாழை, கொய்யா, பப்பாளி, சிட்ரஸ் பழங்கள், அன்னாசிபழம், மாதுளை மற்றும் பலா.
காய்கறிகள் (Vegetables)
பீன்ஸ், பாகற்காய், கத்தரிக்காய், குடைமிளகாய், பச்சை மிளகாய், கேரட், காளிபிளவர், வெண்டைக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி.
இது தவிர இத்திட்டத்தின் வாயிலாக மானியம் பெறுவதற்கு நாமக்கல் மாவட்டத்திற்கு வெங்காயம் மற்றும் மரவள்ளி விளைபொருட்கள் தொகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவு பதப்படுத்துவோர், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்/நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், உரிமம் பெற்ற தரகு முகவர்கள், மாநில விற்பனை/கூட்டுறவு கூட்டமைப்புகள், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ள சில்லரை விற்பனையாளர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்று பயன்பெறலாம்.
மத்திய அரசின் பசுமை செயல்பாடு இயக்கத்தின் வழிகாட்டுதலில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி தகுதிபெற்ற பயனாளிகள்/நிறுவனங்கள், தங்களது விண்ணப்பங்களை http://www.sampada-mofpi.gov.in/Login.aspx என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும், இத்திட்டம் சம்மந்தமான விரிவான விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மனித பிளாஸ்மாவிற்கு மாற்றாகப் பயன்படும் தேங்காய் தண்ணீர் - புதைந்துகிடக்கும் மருத்துவப் பயன்கள்!
Share your comments