வளர்ந்து வரும் பயிர், செடி, கொடிகளில் பூச்சித் தாக்குதல் என்பது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்தாமல் ஆர்கானிக் உரங்களை (வீட்டுத் தயாரிப்பு உரங்களை) பயன்படுத்தி பூச்சித் தாக்குதல்களில் இருந்து விரைவில் பயிர்களை காப்பற்றலாம் என்கிறார் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முனைவர் மு .உமா மகேஸ்வரி.
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களையும் அடிப்படையாகக் கொண்டு தான் பயிர், செடி, கொடி, மரங்கள் ஆகியவை வளர்கின்றன. பயிர்களை நோய் தாக்காமல் இருக்கவும், பூச்சி தாக்குதல் மற்றும் அதிக விளைச்சல் போன்றவற்றிற்காக நாம் ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். இதனால் நல்ல ஊட்டச்சத்துள்ள பயிர் மற்றும் காய்கறிகளை மறந்து வருகிறோம்.
ஆர்கானிக் உரங்களை (இயற்கை கரிம உரங்கள்) பயன்படுத்துவதன் மூலம், பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து விரைவில் காக்க முடியும் என்றும் பயிர் செடி கொடிகளை நல்ல ஆரோக்கியத்துடன் வளர்த்தெடுக்க முடியும் என்கிறார் முனைவர் உமா மகேஷ்வரி. அவருடை சில ஆர்கானிக் உரங்கள் குறித்து கீழே பார்க்கலாம்.
பிரம்மாஸ்திரம்
தேவையான பொருட்கள்
10 லிட்டர் கோமியம் , 5 கிலோ அரைத்த வேப்பிலை, அரைத்த சீதா, பப்பாளி, மாதுளை, கொய்யா இலைகள் தலா 2 கிலோ என அனைத்தையும் கலந்து நன்கு கொதிக்க விட்டால், கிடைக்கும் கரைசலே பிரம்மாஸ்திரம் ஆகும்.
பயன்படுத்தும் முறை
ஒரு நாள் கழித்து வடிகட்டி, 2 – 2.5 லி பிரம்மாஸ்திரத்தை, 100 லி நீரில் கலந்து தெளித்தால், அனைத்து பூச்சிகளும் குறையும்.
அரப்பு - மோர் கரைசல்
தேவையான பொருட்கள்
4 லிட்டர் மோர் , ஒரு லிட்டர் இளநீர் , 250 கிராம் பப்பாளி பழ கூழ், 100 கிராம் மஞ்சள் தூள், 10 முதல் 50 கிராம் பெருங்காயம் தூள் ஆகியவற்றைக் கலந்து கரைசலாக்கிக் கொள்ளவும். அவற்றுடன் வேம்பு, துளசி, அரப்பு, சீதாப்பழம், நொச்சி, கற்றாழை மற்றும் புதினா இலைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கலந்து விடவும். இதனை 7 நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.
அரப்பு (மற்றொரு முறை)
தேவையான பொருட்கள்
வேம்பு, புங்கம், அல்லது மலை வேம்பு 1-2 கிலோ, சீதாப்பழம் அல்லது தங்க அரளி 200-250 கிராம், எட்டி100-250 கிராம், கடுக்காய் சுண்டக்காய் 1-2- கிலோ, பச்சை மிளகாய் 500-1000 கிராம், வில்வம் பழம் 5-10 எண்ணிக்கை, அல்லது ஊமத்தை பழம் 10-20 எண்ணிக்கை.
தயாரிக்கும் முறை
மேலே பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாகக் கலந்து ஒரு கரைசலை உருவாக்க வேண்டும். 12 மணி நேரம் அந்த கரைசலை நொதிக்க விட வேண்டும்.
பயன்படுத்தும் முறை
ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம். கை தெளிப்பானில் தெளிக்கும் போது ஒரு டேங்க் அளவுக்கு தெளிக்கும் அளவு இது ஒரு ஏக்கர் பயிருக்கு 10 தெளிப்பான் டேங்க் அளவுக்கு தெளிக்க வேண்டியிருக்கும்.
புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
தேவையான பொருட்கள்
வேம்பு, புங்கம், அல்லது மலை வேம்பு 1-2 கிலோ அல்லது 250-500 கிராம், சீதாப்பழ அல்லது தங்க அரளி 200-250 கிராம், எட்டி100-250 கிராம், கடுக்காய் சுண்டக்காய் 1-2- கிலோ, பச்சை மிளகாய் 500-1000 கிராம், வில்வம் பழம் 5-10 எண்ணிக்கை, அல்லது ஊமத்தை பழம் 10-20 எண்ணிக்கை ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தயாரிக்கும் முறை
இந்த பொருட்களை ஒன்றாகக் கலந்து ஒரு கரைசலை உருவாக்க வேண்டும். 12 மணி நேரம் இக்கரைசலை நொதிக்க விட வேண்டும். பின்பு அது பசை போல் மாறிவிடும்.
பயன்படுத்தும் முறை
1 கிலோ பசையை 100-125 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பு செய்யலாம். இவ்வாறு உபயோகிப்பதின் மூலம் இயற்கையாக கம்பளிப்பூச்சி புழுக்கள், இலைச்சுருள் புழு, தண்டு துளைப்பான் ஆகிய பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை
இந்த பிரச்சனை பொதுவாக மிளகாய், காய்கறிகள் மற்றும் பருத்தியில் ஏற்படுகிறது. பூச்சிகள் எல்லாம் இலைகள் மற்றும் கிளைகளை தாக்குகிறது. இந்த தாக்குதலின் விளைவாக இலைகள் சுருண்டு கொட்டத் துவங்கி விடும். பின்வரும் ஆர்கானிக் உரம் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த உதவுகிறது.
தேவையான பொருட்கள்
லண்டானா காமரா, வேம்பு, நொச்சி, புகையிலை மற்றும் சிரியாநங்கை இலைகளில் 2-3 கிலோ எடுத்துக்கொள்ளவும். சீதாப்பழம், கற்றாழை, பிரண்டை அல்லது வில்வம் பழம் (5 -10) அல்லது பச்சை மிளகாய் (2 -3 கிலோ) இவற்றுடன் 100 கிராம் மஞ்சள் தூள் எடுத்துக்கொள்ளவும்.
தயாரிக்கும் முறை
சிறிய துண்டுகளாக இலைகளை வெட்டவும் (பில்வா பழம் அல்லது மிளகாய் பயன்படுத்தி நசுக்கவும்). மஞ்சள் தூள் சேர்க்கவும். முன்பு குறிப்பிட்ட நொதித்தல் முறை பயன்படுத்தி கலவையை தயாரிக்கவும். இந்த கலவையை 7 நாட்களுக்கு நொதிக்க விடவும்.
பயன்படுத்தும் முறை
ஒரு லிட்டர் கரைசலில் பத்து லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கலாம். தாக்குதலின் தீவிரம் பொறுத்து, 7-10 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை மீண்டும் தெளிப்பு செய்யலாம்.
இவ்வாறு இயற்கை முறையில் நாம் தயாரிக்கும் இந்த ஆர்கானிக் உரங்கள் அல்லது பூச்சிக் கொள்ளிகள், பயிர்களுக்கு நல்ல சத்துகளையும் வழங்குகிறது. எனவே நாம் அறுவடை செய்யும் போதும் நல்ல ஊட்டச்சத்துள்ள பயிர்கள் மற்றும் காய்கறிகள் நமக்கு கிடைக்கின்றன.
முனைவர் மு .உமா மகேஸ்வரி,
(உதவி ஆசிரியர், உழவியல்),
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
பெரியகுளம்
மேலும் படிக்க...
ஆவண உத்தரவாதம் இன்றி ரூ.50,000 வரை வங்கிகடன் - மத்திய அரசின் புதிய சலுகை!
மத்திய அரசால் உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் மானியங்களை தெரிந்துகொள்ள எளிய முறை அறிமுகம்!
இத்தனை பயன்கள் ஸ்கிப்பிங்கிலா? இது தெரியாமல் போச்சே!
Share your comments