வயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை பயன்படுத்தி வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் உபயோகப்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. அவ்வாறு மண்ணின் வளம் படிப்படியாகக் குறைந்து, இறுதியில் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது என எச்சரிக்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.
ஆக, மண் வளத்தைப் பெருக்க, இனி இயற்கை விவசாயமே நல்லது. இதற்கு நான் பழக்கப்பட வேண்டுமானால், ரசாயனத்திற்கு பதிலாக இயற்கை விவசாயத்தை மேறகொள்ள, நாம் எந்தெந்த உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டியம் விஷயம்.
எனவே இயற்கை வழி வேளாண்மைக்கு மிகவும் அவசியமான இயற்கை உரங்கள் வகையையும், அவற்றைத் தயாரிக்கும் முறையையும் காண்போம்.
கம்போஸ்ட் உரம் (Compost Fertilizers)
பண்ணைக் கழிவுகளில் இருந்தும், இலை, சருகு மற்றும் குப்பைகளில் இருந்தும் புளுரோட்டஸ் என்னும் காளான் வித்துகளைப் பயன்படுத்தி, ஒரு மாதத்துக்குள் மக்க வைத்து இந்த உரம் தயாரிக்கப்படுகிறது.
தென்னை நார் கம்போஸ்ட் உரம்
தென்னை நார்களில் 50 சதவீதத்திற்கு மேல் லிக்னின் மற்றும் செல்லுலோஸ் உள்ளது. தென்னை நார்களுடன் புளுரோட்டஸ் காளான் வகையைச் சேர்த்து மக்க வைத்து இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.
தொழு உரம்
இரு மாடுகள் வைத்திருக்கும் விவசாயி, ஓராண்டில் 6 டன் தொழு உரம் தயாரிக்கலாம். மாட்டுச் சாணத்தை விட மாட்டின் சிறுநீரில்தான் தழைச்சத்து அதிகம் உள்ளது. எனவே மாட்டுக் கொட்டகையில் மண் பரப்பி, மாடுகள் தின்று கழித்த வைக்கோலை அதில் பரப்பி, அவற்றில் மாட்டை சிறுநீர் கழிக்கும்படி செய்து, அதைச் சேகரித்து மக்க வைத்து இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.
பிண்ணாக்கு உரம்
ஆமணக்கு, நிலக்கடலை, எள், பருத்தி, தேங்காய், புங்கன், இலுப்பை, வேப்பங்கொட்டை ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பிண்ணாக்குகளைக் கொண்டு இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.
பசுந்தாள் உரம்
தக்கைப் பூண்டு, சணப்பு, கொழுஞ்சி, மணிலா, அகத்தி, நரிப்பயறு முதலியவற்றைப் பயன்படுத்தியும், மரம், செடி, கொடி ஆகியவற்றின் தழைகளைப் பயன்படுத்தியும் இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரம் தழைச் சத்தாகவும், மக்குச் சத்தாகவும் பயன் ஆகி, நுண்ணுயிர்களைச் செயல் திறன் பெறச் செய்கிறது.
மண்புழு உரம்
ஆடு, மாடு கழிவுகள் மற்றும் வீடு, தோட்டக் கழிவுகளை பள்ளத்தில் குவித்து, அதில் மண் புழுக்களை இட்டு மக்கச்செய்து இந்த உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை உரத்தால் பயிர்களுக்கு தழை, மணி, சாம்பல், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், கந்தகம் போன்ற உலோகச் சத்துகளும் கிடைக்கின்றன. பயிர் சாகுபடி வரையிலும் இந்த சத்துகள் பயன்படுகின்றன. இதுதவிர பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஜிம்ரலின், சைட்டோகனிஸ் ஆகிய வளர்ச்சி ஊக்கிகளும் கிடைக்கின்றன.
மேலும் படிக்க...
உடலுக்கு உரமூட்டும் உளுந்து -சாகுபடிக்கான எளிய வழிமுறைகள்!
மாணவர்கள் மரக்கன்று நட சட்டம் கோரி பிரதமரைக் கவர்ந்த கொடைக்கானல் வாசி!
Share your comments