அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாடு அரசினால் நம்மாழ்வார் விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விருதினைப் பெற தகுதியான விவசாயிகள் யார்? எப்படி விண்ணபிப்பது? போன்ற அனைத்து தகவல்களையும் இப்பகுதியில் காணலாம்.
நமது பண்ணையின் மண்வளத்தை பாதுகாத்து, மக்களுக்கு ஆரோக்கியமான உணவு அதிக அளவில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை, 2023-ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 14.03.2023 அன்று வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக அரசு அங்கக வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் பெயரில் விருது வழங்குதல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியது. நடப்பு 2023-24 ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில், இதுக்குறித்து வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்ச்செல்வம் தெரிவித்தவை பின்வருமாறு-
"அங்கக வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதனை ஊக்குவித்து பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் "நம்மாழ்வார்" பெயரில் விருது வழங்கப்படும். இவ்விருது ஐந்து இலட்சம் ரூபாய் பணப்பரிசு, பாராட்டுப் பத்திரத்துடன் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்" என்றார். மேற்காணும் அறிவிப்பினைத் தொடர்ந்து, இதற்கான நிதியினை ஒப்பளித்து ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது.
விருதுக்கு விண்ணப்பிக்க தகுதிகள்:
விருதுக்கு விண்ணப்பிக்கும் விவசாயி குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மை முறைகளை பின்பற்றி சாகுபடி செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டு, முழு நேர அங்கக விவசாயியாக இருத்தல் அவசியமாகும். மேலும், அங்கக வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணபிக்க தேவையான ஆவணங்கள்:
- சிட்டா,
- ஆதார் அட்டை நகல்,
- அடங்கல் மற்றும் அங்கக வேளாண்மை சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பரிசுத்தொகை குறித்த விவரம்:
வெற்றிபெறும் மூன்று விவசாயிகளுக்கு நம்மாழ்வர் விருதுடன் ரொக்கப்பரிசும், சான்றிதழும், பதக்கமும் முதலமைச்சர் அவர்களால் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். முதல் பரிசாக, ரூ.2.50 இலட்சத்துடன், ரூ.10,000/- மதிப்புடைய பதக்கமும், இரண்டாம் பரிசாக, ரூ.1.50 இலட்சத்துடன், ரூ.7,000/- மதிப்புடைய பதக்கமும், மூன்றாம் பரிசாக, ரூ.1.00 இலட்சத்துடன், ரூ. 5,000/- மதிப்புடைய பதக்கமும் வழங்கப்படும்.
நம்மாழ்வார் விருதுக்கு பதிவு செய்யும் முறை:
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி மூலமாகவோ அல்லது www.tnagrisnet.tn.gov.in இணையதளம் மூலமாகவோ, தேவையான விபரங்களை அளித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவுக் கட்டணமாக ரூ.100/- மட்டும் அரசுக்கணக்கில் செலுத்தி, 30.11.2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, அந்தந்த வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம். அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கௌரவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இவ்விருது வழங்குதலில் தகுதியான விவசாயிகள் அனைவரும் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
கஷ்டமே இல்லாம மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய சூப்பர் சான்ஸ்
மானியத்தில் வேளாண் கருவி வாங்குவதில் புதிய மாற்றம்- அமைச்சர் அறிவிப்பு
Share your comments