வேளண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை பயன்படுத்திடும் சிறு, குறு விவசாயிகள் மானியத்தைப் பெற்று பயனடையுமாறு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது நிலவி வரும் வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறையினைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு விதைப்பு முதல் அறுவடை முடிய அனைத்து சாகுபடிப் பணிகளையும் வேளாண் இயந்திரங்கள் மூலமாக மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இ-வாடகை மூலம் வேளாண் இயந்திரங்கள் முன்பதிவு:
சொந்தமாக வேளாண் கருவிகளை வாங்கிப் பயன்படுத்த இயலாத விவசாயிகளின் வேளாண் இயந்திரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மண் தள்ளும் இயந்திரம், டிராக்டர், மினி டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற 697 நில மேம்பாட்டு இயந்திரங்களும், சுழல் விசைத்துளைக் கருவி, பெர்குவஷன் கருவி, சிறு விசைத்துளைக் கருவி போன்ற 101 சிறுபாசனத் திட்டக் கருவிகளும் விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், உளிக்கலப்பை, ரோட்டவேட்டர், கொத்துக் கலப்பை, நிலம் சமன் செய்யும் கருவி, விதை விதைக்கும் கருவி, வரப்பு செதுக்கி சேறு பூகம் கருவி, கரும்பு மற்றும் காய்கறி நாற்று நடவு செய்யும் கருவி, களையெடுக்கும் கருவி, பல்வகை பயிர் கதிரடிக்கும் இயந்திரம் போன்ற 40 வகையான 1,885 டிராக்டரால் இயங்கக்கூடிய வேளாண் கருவிகள் டிராக்டருடன் அரசு நிர்ணயித்த குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வியந்திரங்களை விவசாயிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்தபடியே முன்பதிவு செய்து கொள்ளும் வகையில், ”இ-வாடகை” என்னும் செயலி தமிழ்நாடு முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டு, இதன்மூலம் பதிவு செய்யும் விவாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் சொந்த நிலம் வைத்திருக்கும் சிறு,குறு விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை இ-வாடகை செயலி மூலம் பதிவு செய்து, நிலமேம்பாடு, உழவு, விதைப்பு, அறுவடை பண்ணைக் கழிவு மேலாண்மை போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக, தமிழக அரசு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 40 இலட்சம் ரூபாய் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிக மதிப்புள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத சிறு குறு விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களை இ-வடகை செயலி மூலம் பதிவு செய்து மானியத்தைப் பெற்று பயனடையுமாறு விவசாயிகள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என வேளாண் அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:
குறுவை நெல் விவசாயி மரணத்திற்கு திமுக தான் பொறுப்பு- EPS கண்டன அறிக்கை
Share your comments