கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் புதிய தொழில் தொடங்கிட விழைவோரை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்திட்டத்தில் பயனடைய தகுதி, விண்ணப்ப முறை ஆகியவற்றை இப்பகுதியில் காணலாம்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பலர் தங்களது வேலையினை இழந்து பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகினர். வெளிநாடுகளில் பணிபுரிந்து வந்த தமிழர்களும் கொரோனா தொற்றினால் வேலையினை இழந்து தமிழகம் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில், MIGRANTS EMPLOYMENT GENERATION PROGRAMME (MEGP) என்கிற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் வேலை இழந்த தமிழர்கள் சுயத்தொழில் தொடங்க தமிழக அரசின் சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. திட்டத்தின் விவரம் பின்வருமாறு-
விண்ணிப்பிக்க தகுதியான நபர்கள்:
- பொது பிரிவினருக்கு- 18 முதல் 45 வரையும், பெண்கள் SC, ST, BC, MBC, சிறுபான்மையினர் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பானது 18 முதல் 55 வரையிலான நபர்களாகவும் இருக்க வேண்டும்.
- குறைந்தபட்ச கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வெண்டும்.
- வேலைவாய்ப்பு விசாவுடன் 2 ஆண்டுகளுக்கு குறையாமல் வெளிநாட்டில் வேலை பார்த்திருக்க வேண்டும்.
- 01.01.2020 அல்லது அதற்கு பிறகு வெளிநாட்டிலிருந்து தமிழகம் திருப்பியவராக இருத்தல் வேண்டும்.
திட்ட விவரங்கள் :
விண்ணப்பத்தாரர்கள் தொடங்க உள்ள தொழிலின் தன்மை உற்பத்தி (Manufacturing) துறையெனில் அதிகபட்ச திட்ட செலவானது ரூ.15 இலட்சமும், சேவை (Service) மற்றும் வணிகம் (Business) சார்ந்த துறைக்கு அதிகபட்ச திட்ட செலவாக ரூ.5 இலட்சமும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழில் தொடங்குவோரின் பங்களிப்பு & மானிய உதவிகள் விவரம்:
தொழில் முனைவோரின் முதலீடு - பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 10%, சிறப்புப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 5% ஆகும். அரசின் மானியத்தொகையானது திட்ட மதிப்பீட்டில் 25% அதிகபட்சமாக ரூ.2.5 இலட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
விண்ணப்பிக்க தேவைப்படும் சான்றுகள்- கடவு சீட்டு (Passport), விசா நகல் (Visa Copy), கல்விச் சான்று, இருப்பிடச் சான்று, சாதிசான்று, மாற்றுத் திறனாளிகளுக்கான சான்று ஆகியவற்றின் நகல்கள் மற்றும் திட்ட விபரங்கள். பயனாளிகள் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட தொழில் மையங்களில் (அ) "தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர்" இணையதளம் மூலமாக சமர்ப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு (https://www.msmetamilnadu.tn.gov.in) என்கிற இணையதளத்தில் தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம். அல்லது அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை (https://www.rrtamils.tn.gov.in/en/ ) யினை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
பிரதம மந்திரியின் விவசாய பாசனத்திட்டம் - 7 மாவட்ட விவசாயிகளுக்கு ஜாக்பாட்
கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறை.. மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்
Share your comments