1. தோட்டக்கலை

மனம் மயக்கும் ரோஜா சாகுபடி செய்து எப்படி?- எளிய வழிமுறைகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rose Cultivation
Credit:Bioadvanced

மனதைக் கவரும் மலர்களில் பிரத்யேக இடம் எப்போதுமே ரோஜாவிற்கு உண்டு. அதிலும் குறிப்பாக இளம்பெண்களைக் கவரும் மலர் என்றால், அது ரோஜாதான். பல வண்ணங்களில் நம்மை மயக்கிக் கிரங்கடிக்கும் ரோஜாக்களை காணக் கண்கோடி வேண்டும்.

இதன் காரணமாகவே, மலர்க்கண்காட்சியைக் காண பார்வையாளர்கள் குவிகிறார்கள். ரோஜாச் செடியில் ஒரு கொம்மை வெட்டி நட்டினாலே வளர்ந்துவிடும் என்பதால், பெரும்பாலான வீட்டுத் தோட்டத்தில் ரோஜா பயிரிடப்படுகிறது.

வரலாறு

ரோஜா ஆண்டு முழுவதும் விளையக்கூடிய புதர் அல்லது படர்கொடி வகைத் தாவர இனத்தைச் சேர்ந்தது. 

ரோஜாவில் பல வகையான பூக்களும், பலவித வண்ணங்களும் உண்டு.
இதன் தண்டு பகுதி பெரும்பாலும் கூரிய முட்கள் கொண்டதாக இருக்கும்.
பெண்கள் பூவினை தலையில் சூடிகொள்ளவும், மாலையாக கோவில் பூஜையிலும் பயன்படுகிறது.

இரகங்கள் (Variety)

எட்வர்ட் ரோஜா, ஆந்திர சிவப்பு ரோஜா, பன்னீர் ரோஜா ஆகியவை நாட்டு இரகங்கள் ஆகும். கலப்பு ரோஜா இரகங்கள் கிளாடியேட்டர், பேபி பிங்க், சோபியா லாரன்ஸ், YCD 1, YCD 2, YCD 3 போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன.

பருவம் (Season)

மாதத்தில் ரோஜாச் செடிகளை நடவு செய்ய கார்த்திகை மாதம் ஏற்றது.

மண் (Sand)

களியும், மணலும் கலந்த இருமண்பாட்டு நிலம் மற்றும் செம்மண் நிலங்கள் பயிரிட ஏற்றது.

Credit:Seithipunal

நிலம் தயாரித்தல் (Land)

பருவமழை பெய்ய ஆரம்பிக்கும் முன்னரே, 45 செ.மீ நீளம், அகலம் மற்றும் ஆழம் உள்ள குழிகளை 2.0 x 1.0 மீட்டர் இடைவெளியில் எடுத்து ஆறவிடவேண்டும். நடுவதற்கு முன்னர் குழி ஒன்றிற்கு 1 கிலோ தொழு உரம், 1.3 சதம் லிண்டேன் மருந்து 20 கிராம் மற்றும் மேல்மண் இடவேண்டும். லிண்டேன் இடுவதால் கரையான் மற்றும் எறும்புகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

விதைகள் (Seed)

வேர்பிடித்த வெட்டு துண்டுகள் மற்றும் ஒட்டு கட்டிய செடிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது வழக்கம்.

விதைத்தல் (Sowing)

தயார் செய்து வைத்துள்ள குழிகளில், வேர்பிடித்த வெட்டுத் துண்டுகளை குழிகளின் மத்தியில் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம் (Water Management)

நட்ட செடிகளுக்கு உடனடியாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். செடிகள் வேர்ப்பிடித்து துளிர்விடும் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும், பின்பு மண் மற்றும் கால நிலைகளுக்குத் தகுந்தவாறு வாரத்திற்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும். ரோஜா செடிகளுக்கு உப்புநீர் பாய்ச்சினால் செடிகள் நாளடைவில் காய்ந்துவிடும். எனவே உப்புநீர் பாய்ச்சுவதைத் தவிர்க்க வேண்டும்.

உரங்கள் (Fertilizers)

ரோஜா செடியை கவாத்து செய்தவுடன் செடியைச் சுற்றி 2 அடி தள்ளி செடி ஒன்றிற்கு 10 கிலோ தொழு உரத்துடன் 6:12:12 கிராம் என்ற விகிதத்தில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களைப் போடவேண்டும். 

வளர்ச்சி ஊக்கிகள் 

வளர்ச்சி ஊக்கிகளை சரியான முறையில் கொடுத்து வந்தால் போதும். நீர் பாசனம் செய்யும் போது 15 நாட்களுக்கு ஒரு முறை பாசன நீருடன் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து விட வேண்டும். 10 லிட்டர் கோமியத்தில், 5 கிலோ பசுஞ்சாணம், உரலில் இடித்த 5 கிலோ வேப்பிலை கலந்து 48 மணி நேரத்துக்கு ஊற வைத்து வடிகட்டி 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ரோஜா செடிகளின் மீது மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். மாதம் ஒரு முறை ஏக்கருக்கு 100 கிலோ கன ஜீவாமிர்தம் தூவ வேண்டும்.

களை நிர்வாகம்

அக்டோபர் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும். இதுவரை வளர்ந்தவற்றில் 50 சதம் தண்டுகளை வெட்டிவிட வேண்டியது அவசியம். மேலும் காய்ந்த, நோயுற்ற, பூச்சி தாக்கப்பட்ட கிளைகள் மற்றும் குறுக்காக வளர்ந்த கிளைகளையும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். வெட்டிய தண்டுப் பகுதிகளைப் பாதுகாக்க போர்டோபசை அல்லது பைட்டலான் மருந்தை, கார்பரில் 50 சதம் நனையும் தூள் கலந்து தடவி விடவேண்டும்.

Credit: Maalaimalar

பயிர் பாதுகாப்பு (Crop protection)

அசுவினி மற்றும் இலைப்பேன்

இதனைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

மாவுப் பூச்சி

இதனைக் கட்டுப்படுத்த மானோகுரோட்டோபாஸ் அல்லது மீதைல் பாரத்தியான் 2 மில்லி மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

சிவப்பு செதில் பூச்சிகள்

சிவப்பு செதில் பூச்சிகளை கட்டுப்படுத்த நோய் தாக்கிய கிளைகளை அகற்றிவிட வேண்டும். செதில் பூச்சி காணப்படும் தண்டுப் பகுதியை டீசல் அல்லது மண்ணெண்ணெயில் நனைத்த பஞ்சினால் துடைக்க வேண்டும்.

கரும்புள்ளி நோய்

இதனைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 1 கிராம் மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.

அறுவடை (Harvesting)

முதலாம் ஆண்டு ரோஜா பூக்க ஆரம்பிக்கும். ஆனால் இரண்டாம் ஆண்டில் தான் சீரான வளர்ச்சி இருக்கும். மலர்ந்த மலர்களை அதிகாலையிலேயேப் பறிக்க வேண்டும்.

மகசூல் (Yield)

ஒரு ஹெக்டேரிலிருந்து, ஒரு வருடத்திற்கு 10 இலட்சம் பூக்கள் வரை மகசூல் கிடைக்கும்.

மருத்துவப் பயன்கள் (Medical Benefits)

  • ரோஜா இதழ்களை சேகரித்து நிழலில் உலர்த்தி, நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி உட்கொண்டால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு சரியாகும். வாய்ப்புண்ணும் விரைவில் குணமாகும்.

  • ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலை, மாலை ஆகிய இருவேளை அப்படியே உட்கொண்டுவர சீதபேதி இரண்டொரு நாளில் குணமாகிவிடும்.

  • புண்கள் குணமாக ரோஜா பூ இதழ்களிலிருந்து குடிநீர் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். இந்நீரை கொண்டு வாய் கொப்பளிக்க வாய்ப்புண் குணமடையும்.

  • ரோஜா இதழ்களை சேகரித்து தேனிலோ அல்லது சர்க்கரை பாகிலோ ஊற வைத்து தினமும் சாப்பிட்டுவர இதயம் வலிமை பெறும். மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

  • ரோஜா மலரின் சாற்றை ஒற்றைத் தலைவலிக்கு பயன்படுத்தலாம். தலைவலி எந்த பக்கம் இருக்கிறதோ, அதற்கு நேரெதிர் நாசி துவாரத்தில் இதன் சாற்றை 2 துளிவிட உடனே தலைவலி மறைந்துபோகும்.

மேலும் படிக்க...

மலர் சாகுபடி செய்ய விருப்பமா? பயிற்சி அளிக்கிறது வனவியல் கல்லூரி!

ஆகஸ்ட் மாதத்தில் பயிரிடவேண்டிய செம்பருத்தி - சாகுபடி முறைகள்!

English Summary: How to cultivate fragrant roses? - Simple steps! Published on: 10 August 2020, 09:34 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.