1. தோட்டக்கலை

வீட்டுத் தோட்டத்தில் சந்தனமரம் வளர்ப்போமா?- சில யோசனைகள்

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Medical Benefits of sandal wood
Credit: Nursery live

மங்கலப் பொருட்களில் முக்கியமானதாகத் திகழும் சந்தனம் என்று சொல்லும்போதே அனைவர் முகமும் மலர்கிறது. காரணம் அதன் நறுமணம்.

எத்தனை பெரிய கூட்டத்தில் இருந்தாலும் ஒரிஜினல்(Original) சந்தனத்தின் மணத்திற்கு ஈடு-இணையே இல்லை.

பூர்வீகம்

சந்தனம் (Santalum album, Indian sandalwood) என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு தாவரம். இதன் தாயகம் (Motherland) இந்தியா. நம் நாட்டு மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். நம் நாட்டின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படுகிறது. சுமாரான உயரத்திற்கு வளரும் இயல்புடைய, சந்தன மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிறைந்தது. இதிலிருந்து எடுக்கப்படும் அகர் என்னும் எண்ணெய் சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியது.

பண்புகள்

சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்ளும் சந்தன மரம், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பழங்களை தருகிறது. மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும்.

சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சந்தன மரங்களுள் சிறப்பு வாய்ந்தது வெள்ளை சந்தன மரம். ஏனெனில் இது மரபணு சோதனை மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்படக் கூடிய ஒன்று. பல லட்சம் மரங்களுக்கிடையில் ஒன்று அல்லது இரண்டு மரம் மட்டுமே வளரும். இம்மரத்தில் வடிவமைக்கக்கூடிய முருகன், சிவன், வேல் முதலான சிலைகள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன.

சந்தனம் சுமாரான உயரத்துடன் கூடிய கிளைகள் எப்போதும் கீழ்நோக்கி தாழ்ந்த நிலையில் காணப்படும் மரம். இதன் இலைகள் தடித்தவை. 4 முதல் 7 செமீ நீளத்தில் எதிர் எதிராக அமைந்தவை. ஆழ்ந்த பச்சை நிறமானவை. மேற்புறம் பளபளப்பாக காணப்படும். சந்தனப் பூக்கள் சிறியவை. பழுப்பு நிறமானவை. சிறிய கொத்துகளில் காணப்படும். பழங்கள் உருண்டையானவை. முதிர்ந்த மரங்கள் காய்ந்த நிலையில் நறுமணம் கொண்டவை.

Credit: Deccan Herald

மலைக்காடுகளில் சந்தனம்

சந்தனம் மரங்கள் தக்காண பீட பூமியின் தெற்கு பகுதிகளில் பொதுவாக வளர்கின்றன. தமிழகத்தின் மழைக்காடுகளில் தானே வளர்கின்றன. ஜவ்வாது மலைப் பகுதியில் நல்ல மணமுள்ள சந்தனம் விளைகிறது. 

உலகளவில், 65 சதவீதம் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவில்தான் சந்தன மரங்கள் விளைகின்றன. சந்தனக் கட்டையைச் சந்தனக் கல்லில் தேய்த்து வரும் சாந்தை, கோடை வெப்பத்தைத் தணிக்க மார்பில் பூசிக்கொள்வது இந்திய மக்களின் வழக்கம் ஆகும் .

நீங்களும் வளர்க்கலாம்

சந்தனமரம் வளர்ப்பு என்றாலே மக்கள் மனதிலே ஒரு பயம். சட்ட சிக்கல், திருடர் பயம், தாமாக விற்கமுடியாது என்ற நிலைமை போன்ற காரணங்களால் சந்தனமர வளர்ப்பை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதன் தேவை மற்றும் வருமானம் மிக மிக அதிகம். தென்னிந்தியாவிலே வறட்சியை தாங்கி நன்கு வளரும் மரம் என்றால் அது சந்தன மரம்தான்.

வருமானம் ஈட்டுவது எப்படி?

சந்தன மரங்களை வளர்ப்பவர்கள் ஒரு போதும் தண்டிக்கப்படுவதில்லை. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்ய வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். ஐந்தாண்டுகள் வளர்ந்த சந்தன மரங்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். சந்தன மரத்தின் ஏலம் மூலம் வரும் வருமானத்தில் 25% அரசுக்கு வரியாகவும், 75% வளர்ப்பவர்களுக்கு வருமானமாகவும் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது மொத்தத் தொகையும் வளர்ப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே சந்தன மரங்களை வளர்க்க அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

சந்தன மரங்கள் வேலிகளிலும், தரிசு நிலங்களிலும் தானாகவே வளர்ந்து வறட்சியிலும் பசுமையாக காட்சிதரும் அழகிய மரமாகும். தரிசு நிலங்கள் தங்கம் விளையும் பூமியாகும்.சந்தன மரங்களை வீடுகளிலும், பூங்காக்களிலும், விவசாய நிலங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை வளாகங்களிலும் வளர்க்கலாம். இந்தியாவின் அனைத்து நிலப்பகுதிகளிலும், தட்ப வெப்ப நிலைகளிலும் வளம் குன்றிய பாறை நிலங்களிலும் வளரக்கூடியது.

ஒரு கிலோ சந்தன மரக்கட்டை 6,000 ரூபாய் வரை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 20 ஆண்டுகள் வளர்ந்த மரத்திலிருந்து 3 முதல் 5 கிலோ வாசனை மிகுந்த வைரப் பகுதி கிடைக்கும். 20 ஆண்டுகள் வளர்ந்த ஒரு மரத்தின்மூலம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறலாம். அதனால், விவசாயிகளும் பொதுமக்களும் விவசாய நிறுவனங்களும் ஆர்வமுடன் சந்தன மரங்களை வளர்க்கலாம்.

Credit: Deccan Chronicle

இம்மரத்திற்குப் பல மருத்துவ குணங்களும் உள்ளதை பண்டைய நூல்களில் சித்தர்கள் குறித்துள்ளனர்.

மருத்துவப் பயன்கள்

  • சருமத்திற்கு மிருதுத் தன்மை அளிக்கக்கூடியது. காய்ச்சலையும், ஒற்றைத் தலைவலியையும் போக்கும் குணமும் உண்டு.

  • சந்தனம் சிவப்பு, மஞ்சள், வெண்மை என மூன்று வகைகளாக‌ இதன் கட்டையின் நிறத்தை ஒட்டி பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று வகைக்கும் மருத்துவத் தன்மை ஒன்றுதான். சந்தனக் கட்டைகள், சந்தன எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

    சந்தனம் உடலைத் தேற்றும், சிறு நீர் பெருக்கும். வியர்வை உண்டாக்கும். குளிர்ச்சி உண்டாக்கும்.

  • சந்தனக் கட்டையைத் தொடர்ந்து உபயோகித்துவர வெள்ளை படுதல் குணமாகும். உடல் பலம் பெறும்.

  • ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.அறிவும் மனமகிழ்ச்சியும், உடல் அழகும் அதிகமாகும். சந்தனம் எண்ணெயால் உடல் சூடு, ஆகியவைக் கட்டுப்படும்.

  • 1 தேக்கரண்டி சந்தனம் தூளை ½ லிட்டர் நீரில் இட்டு காய்ச்சி குடிநீர் செய்து குடிக்க, சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும்.

  • வெட்டை சூடு குணமாக சந்தனத்தைப் பசும்பாலில் உரைத்து சுண்டைக்காய் அளவு காலை, மாலை வேளைகளில் 10 நாட்களுக்கு சாப்பிட்டு வரவேண்டும்.

  • சந்தனக் கட்டையை, எலுமிச்சம் பழசாறில் உரசி பசையாக செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச படர் தாமரை, வெண்குஷ்டம், முகப் பரு குணமாகும்.

  • 2 தேக்கரண்டி சந்தனத் தூளை, ½ லிட்டர் நீரில் இட்டு காய்ச்சி குடிநீர் செய்து குடிக்க இரத்த மூலம் குணமாகும்.

  • சந்தனம் தூள் ½ தேக்கரண்டி, ½ டம்ளரில் நீரில் போட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 3 வேளைகளாக 50 மிலி அளவாக குடிக்க காய்ச்சல் குணமாகும்.

  • கண்கட்டிகள் கரைய சந்தனக் கட்டையை எலுமிச்சம் பழச் சாற்றில் மைய அரைத்து பசைபோல செய்து கட்டிகளின் மீது பற்றுப் போட வேண்டும். இரவில் படுக்க போகும் முன்னர் இவ்வாறு செய்து கொண்டு காலையில் கழுவ வேண்டும். 5 நாட்கள் தொடர்ந்து செய்யலாம்.

  • கூந்தல் தைலங்கள், சோப்புகள், நறுமணப் பொருட்கள் என எல்லாவற்றிலும் சந்தனத்தின் தேவை இன்றியமையாதது.

நன்றி - டாக்டர்.ஆர். சரவணன்,
உயிர் நுண்ணியிரியல் விஞ்ஞானி
சேலம்

மேலும் படிக்க...

சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் அதிசயம் நிகழ்த்தும் பப்பாளி

சருமப் பராமரிப்புக்கு கைகொடுக்கும் மாதுளை!

English Summary: More Beneficial Sandalwood- Ideas to grow at home Published on: 26 July 2020, 07:51 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.