தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.
இதனால், இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திடீர் என பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டாலும் சில இடங்களில் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, சுசீந்திரம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. நாகர்கோவிலில் தாழ்வான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், அவ்வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் தத்தளித்தன. குமரி மாவட்டத்தில் தொடர்ந்து 5 வது நாளாக பிற்பகலுக்கு மேல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, டவுன், பாளையங்கோட்டை, என்.ஜி.ஒ காலனி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மழையின் காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் குளம் போல் தேங்கியும் நிற்கிறது. சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றன.
இதேபோல, மதுரை, புறநகர் பகுதிகளான வாடிப்பட்டி, நாகமலைப் புதுக்கோட்டை, அச்சம்பத்து, விராட்டிபத்து உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதேபோல கோரிப்பாளையம், முனிச்சாலை, தல்லாகுளம், அண்ணா நகர் பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி ஊராட்சி கோட்டை மலை கிராமத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கடந்த 1997ஆம் ஆண்டு அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடு ஒன்று இடிந்து விழுந்தததில் முனியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி உயிரிழந்தார்.
இந்நிலையில், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ராசக்காபாளையம், ஆனைமலை, ஆழியார் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்பாச்சேத்தி சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. கோடை மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் படிக்க:
கொங்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை உள்பட 9 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
Share your comments