தென்னை விவசாயிகள் தென்னை சாகுபடியில் உரிய வருமானம் ஈட்ட இயலாமல் பொருளாதார ரீதியாக விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருந்தும் நிலையில் இருக்கின்றனர். அதோடு விவசாயிகளின் கோரிக்கைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள் என்ற காரணங்களால் திருப்பூர் உடுமலைப்பகுதி விவசாயிகள் தேங்காய்களை நடுரோட்டில் உடைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
நீண்ட நாளைக்கு நிலைத்து நிற்பதாகவும் நிரந்தர வருமானத்தை அளிக்கக்கூடியதாகவும் தென்னை விவசாயம் உடுமலைப் பகுதியில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. உடுமலைப்பகுதியில் விவசாயிகள் முழுவதுமாகவும், பகுதி அளவும் தென்னை மரங்களைச் சாகுபடி செய்து பராமரித்தும், தேங்காய்களை விற்பனை செய்தும் வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக தேங்காய்க்கு உரிய விலை கிடை ப்பதில்லை.ஆனால் பராமரிப்பு, இடுபொருட்கள்,தேங்காய் போடுதல், உரித்தல் ,உடைத்தல், சுமத்தல் எனப் பல விவசாயம் சார்ந்த பணிகளுக்குக் கூலியும் உயர்ந்து இருக்கிறது. இத்தகைய காரணங்களால் தென்னை சாகுபடியில் வருமானம் ஈட்ட முடியாமல் பொருளாதார ரீதியாக விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்பது வேதனைக்குரிய செய்தியாக இருக்கின்றது.
இந்த சூழலில் தேங்காய்க்கு உரிய விலை வழங்கக்கோரி நீண்ட நாட்களாக கோரிக்கையும் விடுத்து வருகின்றனர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திகொண்டு வருகின்றனர். இத்தகைய காரணங்களால் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தென்னை விவசாயிகளைக் காப்பாற்ற கோரி தேங்காய் உடைக்கும் போராட்டம் உடுமலையில் நடைபெற்றிருக்கிறது.
உடுமலை பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மாவட்ட தலைவர் பரமசிவம், மாவட்ட செயலாளர் அருண்பிரகாஷ், மாநிலத் தலைவர் சண்முகம் முதலானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் முன்வைத்த கோரிக்கைகள் வருமாறு:
- நாறு நீக்கிய தேங்காயினைக் கிலோ ரூ.50 க்கு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
- கொப்பரை தேங்காய் கிலோ ரூ. 140 க்கு விலை நிர்ணயம் செய்திட வேண்டும்
- ஏக்கருக்கு ஆண்டு ஒன்றுக்கு 290 கிலோ கொள்முதல் செய்வதை 900 கிலோ எனும் அளவிற்கு உயர்த்த வேண்டும்.
- கொப்பரைக்கு ஊக்கத்தொகை வழங்கி ஆண்டு முழுவதும் கொப்ப ரையை கொள்முதல் செய்ய வேண்டும்.
- ரேஷன் கடைகள் மூலமாக தேங்காய் எண்ணெய் வழங்கிட நட வடிக்கை எடுக்க வேண்டும்.
- வெளியிலிருந்து கிராம அங்காடிகளுக்குப் பாமாயில் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும்.
- சென்னையில் உள்ள தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை திருமூர்த்தி மலையில் உள்ள தென்னை ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிலையத்திற்கு மாற்றிட வேண்டும்.
என்பன முதலான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்றுள்ளது.
மேலும் படிக்க
கோவையில் விவசாயிகள் நூதனப் போராட்டம்! கஞ்சி தொட்டி திறந்து ஆர்பாட்டம்!!
விவசாயிகளால் தொடங்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்! புதுவை விவசாயிகள் அசத்தல்!!
Share your comments