ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் உட்பட திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் 12,543 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் எம்எல்ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டு கடந்த பிப்.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அதிமுக கூட்டணி சார்பில் அதிமுகவின் வேட்பாளராக தென்னரசும் என இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
இடைத்தேர்தலில் 74.79 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையிலிருந்து தற்போது வரை திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 19,867 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு 7,324 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 12,543 வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு சுற்றுகள் முடிவிலே மிகப்பெரிய வாக்கு வித்தியாசம் இருப்பதால் திமுக-காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட துவங்கியுள்ளனர். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா 1,146 வாக்குகள் பெற்று பின் தங்கியுள்ளார்.
கிடைத்துள்ள வாக்குகளின் அடிப்படையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்த வெற்றி தமிழ்நாடு முதல்வரின் நல்லாட்சிக்கு மக்கள் அளித்த ஆதரவு என்றார்.
திரிபுரா, நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் நடைப்பெற்ற சட்டமன்றத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையும் இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா மாநிலத்தில் 42 தொகுதிகளில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதனைப்போல் 60 தொகுதிகளை கொண்ட நாகலாந்து மாநிலத்தில் 37 தொகுதிகளில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மேகாலயா மாநிலத்தில் இதுவரை எந்த கட்சியும் தனிப் பெரும்பான்மையுடன் முன்னிலை பெறவில்லை. தொடர்ச்சியாக இழுபறி நிலை நீடித்து வருகிறது.
இதனிடையே ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கும் எண்ணும் மையத்திலிருந்து வேட்பாளர்கள் பெற்ற அதிகாரப்பூர்வ வாக்குகள் குறித்த தகவல்கள் செய்தியாளர்களுக்கு வழங்கப்படவில்லை என பத்திரிக்கையாளர்கள் அங்கிருந்த தேர்தல் அதிகாரி, மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், 3 சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மேலும் காண்க:
86 தலைப்புகளில் தமிழக அரசுக்கு 307 யோசனைகள்- பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை
கையில் பரீட்சை அட்டையுடன் 12 ஆம் வகுப்பு தேர்வெழுத வந்த பாஜக முன்னாள் MLA
Share your comments