விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க முயலாத மாநில அரசினை கண்டித்து வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னையில் விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வைகை மற்றும் தாமிரபரணி ஆற்று நீர் பாசனம் பெறும் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை பராமரிக்க திமுக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக நிதி ஒதுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விவசாயிகளின் பிரச்சினைகளை தமிழக அரசு தீர்க்காததால், இந்த ஆண்டு உணவு தானிய சாகுபடியில் பெரும் வீழ்ச்சி ஏற்படும் என குறிப்பிட்டுள்ள விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னையில் மாபெரும் காலவரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். மதுரையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில அளவிலான செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்த விவரங்கள் பின்வருமாறு-
“தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மாநில அரசு எதையும் செய்யவில்லை. நெல் மற்றும் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும், மதுரையில் வேளாண் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்று அளிக்கப்பட்ட உத்தரவாதமும் மறந்துவிட்டது போல” என்றார்.
”வைகை, தாமிரபரணி ஆற்று நீர் பாசனம் பெறும் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை பராமரிக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2 ஆண்டுகளாக நிதி ஒதுக்கவில்லை. இதனால் அனைத்து அணைகளிலும் நீர் இருப்பு குறைந்துள்ளது. இதுக்குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ளவில்லை” எனவும் குற்றஞ்சாட்டினார். ”நிலம் கையகப்படுத்தும் செயலில் என்.எல்.சி நிர்வாகம் சட்டவிரோதமாக செயல்படுகிறது. அதற்கு தமிழக அரசு துணை போகக் கூடாது” எனவும் தெரிவித்தார்.
மேலும், “நில உரிமைச் சட்டம் 2023-ஐ அரசு வாபஸ் பெற வேண்டும். விவசாயிகளின் பிரச்சினையினை தீர்க்காத அரசினால், இந்த ஆண்டு உணவு தானிய சாகுபடியில் பெரும் வீழ்ச்சி ஏற்படலாம். அதைப்போல் மேகதாது அணை கட்டும் கர்நாடகா அரசின் முயற்சிகளுக்கும் தமிழக அரசாங்கம் எதுவும் செய்யவில்லை, " என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னையில் நடைப்பெற உள்ள, மாபெரும் போராட்டத்தில் விவசாயிகள் பெரும் திரளாக பங்கேற்க அழைப்பும் விடுத்துள்ளார்.
மதுரையில் நடைப்பெற்ற தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டத்தில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
சந்திராயன் 3- இன்று முதல் அடுத்த 18 நாட்கள் ரொம்ப முக்கியம்.. ஏன்?
பசு மாட்டினை பராமரிக்க குறைந்த வட்டியில் கடன்- ஆட்சியர் அறிவிப்பு
Share your comments