தர்மபுரி மாவட்டம் வெற்றிலைக்காரன்பள்ளம் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த நெல் காணாமல் போனாதாக உண்மைக்கு புறம்பான செய்தியை இன்னும் பலர் பரப்பி வருகின்றனர் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள வெற்றிலைக்காரன்பள்ளம் கிடங்கில் 22273 மெட்ரிக் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் 7,174 மெட்ரிக் டன் அரவைக்கு அனுப்பியது போக 15,099 மெட்ரிக் டன் இருந்த நிலையில் 7000 டன் இருப்பில் இல்லை என செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவத்தொடங்கின.
ஆட்சியர் அளித்த விளக்கம் என்ன?
இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவரையும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குநரையும் அந்தக் கிடங்கில் 100% தணிக்கை செய்து உண்மைத்தன்மையை அறிய ஏற்பாடு செய்திட உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆணையிட்டார். அமைச்சரின் ஆணையினை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக விழிப்புப்பணிக் குழுவினரும் ஆய்வு செய்து அது போன்று ஏதுமில்லை என்று செய்தியாளர்களை அழைத்து தெளிவுப்படுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவிக்கையில், 7000 டன்களுக்கு மேல் காணாமல் போவது என்பது சாத்தியமில்லை. 7,174 டன்கள் அரைப்பதற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையினை காணாமல் போன நெல்லாக தவறுதலாக குற்றம்சாட்டிருக்கலாம் எனக்குறிப்பிட்டார். மேலும், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், 120 லாரிகளும் நெல்லை கிடங்கியிலிருந்து ஆலைகளுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிவில் சப்ளைஸ் விஜிலென்ஸ் பிரிவின் அதிகாரிகள் குழு கிடங்கு மற்றும் ஆலைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ஆட்சியர் சாந்தி கூறினார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அளித்த விளக்கம் செய்தித்தாள்களில் விரிவாக வந்த பின்னும் சிலர் தேவையில்லாமல் அது பற்றி உண்மைக்குப் புறம்பாக செய்தி பரப்பி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மே-31 அன்று 1596 மெட்ரிக் டன் நெல்லும், (ஜூன் – 1) அன்று 1789 மெட்ரிக் டன் நெல்லும் அரவை ஆலைக்கு அனுப்பப்பட்டுத் தொடர்ந்து தலைமை அலுவலகக் குழுவினர் ஆய்வு செய்ததில் அந்தக் கிடங்கிலிருந்த நெல் அட்டிகளில் மாறுபாடு இல்லை என்று தெரிவித்துள்ளதாக அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். இவ்வாறான நிலையில் தேவையற்ற உண்மைக்கு மாறானவற்றை வெளியிட வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பொதுவாக 2,500 மூடை நெல் அடுக்கி வைப்போம். சமீபத்தில் நாங்கள் 3,600 பைகளை அடுக்கி வைத்தோம், மொத்தம் 130 அடுக்குகள் உள்ளன. வெளியில் இருந்து பார்க்கும் மக்கள் நெல் காணாமல் போய்விட்டதாக நினைத்திருக்கலாம்,'' என்று தெரிவித்துள்ளார்.
pic courtesy: TNIE
மேலும் காண்க:
ஒடிசா இரயில் விபத்து- தமிழகம் முழுவதும் இன்று துக்கம் அனுசரிப்பு
Share your comments