மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகள் மற்றும் சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 9 விருதாளர்களுக்கு 22.25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.4.2023) தலைமைச் செயலகத்தில், 2022-23ஆம் ஆண்டிற்கான பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 6 பயனாளிகளுக்கு பரிசுத்தொகையாக 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 3 வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக 2.25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்நாட்டின் கைத்தறி தொழிலானது தொன்மையும், உயரிய பாரம்பரிய சிறப்பும், தனித்துவ வேலைப்பாடுகளும் கொண்டதாகும். கைத்தறி தொழிலில் தமிழ்நாடானது பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குவதுடன், உலகளவில் பிரசித்தி பெற்ற இரகங்களான காஞ்சிபுரம் பட்டு, திருபுவனம் பட்டு மற்றும் பவானி ஜமக்காளம் போன்ற இரகங்களை உற்பத்தி செய்து வருகின்றது. தமிழ்நாட்டில் 1,112 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
சிறந்த நெசவாளர் விருது:
அரசால் கைத்தறி நெசவாளர்களுக்கென செயல்படுத்தப்பட்டு வரும் ஏராளமான திட்டங்களில் ஒரு பகுதியாக புதுமையான மற்றும் கண்கவர் வடிவமைப்புகளை புகுத்தி தற்போதைய சந்தை தேவைக்கேற்ப பட்டு மற்றும் பருத்தி கைத்தறி இரகங்களை உற்பத்தி செய்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வரும் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் "சிறந்த நெசவாளர் விருது" ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்விருதிற்கான முதல் பரிசிற்கான பரிசுத் தொகை 5 இலட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசிற்கான பரிசுத்தொகை 3 இலட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசிற்கான பரிசுத் தொகை 2 இலட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.
சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருது:
மேலும், ஜவுளித் தொழிலின் நுட்பங்கள், வடிவமைப்பு மற்றும் காலமாற்றத்திற்கேற்ற வண்ணங்களின் போக்கினை கணித்தல் ஆகியவற்றில் பங்களிப்பு திறன் கொண்ட வடிவமைப்பாளர்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் பொருட்டும், அவற்றை தற்கால சந்தை மற்றும் ஆடை அலங்கார நிலவரங்களுக்கேற்ப கைத்தறி துணிகளாக உற்பத்தி செய்யும் பொருட்டும் தமிழ்நாடு அரசால் மாநில அளவிலான "சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருது" 2022-23ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விருதிற்கான முதல் பரிசிற்கான பரிசுத் தொகை 1 இலட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசிற்கான பரிசுத்தொகை 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசிற்கான பரிசுத் தொகை 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
விருது பெறுபவர்களின் விவரம்:
அதன்படி, 2022-2023 ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு இரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசினை திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்.வி. ராஜலெட்சுமி அவர்களுக்கும், இரண்டாம் பரிசினை காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எம். சுரேஷ் அவர்களுக்கும், மூன்றாம் பரிசினை ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எம். மணி அவர்களுக்கும் வழங்கப்பட்டன.
பருத்தி இரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசினை பரமக்குடி, பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எம்.கே.சரவணன் அவர்களுக்கும், இரண்டாம் பரிசினை பரமக்குடி, கலைமகள் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் ஜி.எல்.நாகராஜன் அவர்களுக்கும், மூன்றாம் பரிசினை சேலம், தோப்பூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் திருமதி.க.இந்திராணி அவர்களுக்கும்;
என மொத்தம் 6 விருதாளர்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.
மேலும், மாநில அளவிலான சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கான முதல் பரிசினை கோயம்புத்தூரைச் சார்ந்த ம. சண்முகப்பிரியா அவர்களுக்கும், இரண்டாம் இரண்டாம் பரிசினை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வடிவமைப்பு தொழில்நுட்பம் (Fashion Technology) பயிலும் மாணவரான திருப்பூர், வி. சிபின் அவர்களுக்கும், மூன்றாம் பரிசினை ஆரணியைச் சார்ந்த திரு ம.ஜ. கிரண்குமார் அவர்களுக்கும், என மொத்தம் 3 விருதாளர்களுக்கு 2.25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், இ.ஆ.ப., கைத்தறி துறை ஆணையர் த.பொ. ராஜேஷ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காண்க:
அது பேரு இல்ல சார்.. பக்கா பிராண்ட் - இந்தியாவில் நேரடியாக கால்பதிக்கும் ஆப்பிள்
Share your comments