அண்மையில் முன்னணி பத்திரிக்கை ஒன்று “வெறும் வாயில் சுட்ட வடையா வேளாண் பட்ஜெட்” என கட்டுரை வெளியிட்டு இருந்தது. அதில் கூறப்பட்டுள்ள தகவலுக்கு வேளாண்மை - உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் மறுப்பறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டில் வெளியான தி.மு.க. தேர்தல் அறிக்கையில், வேளாண்மைக்கு என்று தனி நிதி நிலை அறிக்கை உருவாக்கப்படும் என தெரிவித்தது போல மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவி ஏற்ற முதல் ஆண்டிலேயே வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததுடன், வேளாண்மை என்று இருந்த துறையை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் மூன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 250 அறிவிப்புகளுக்கு, 242 அறிவிப்புகளுக்கான (97 சதவிகிதம்) நிதியினை ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன எனவும் ஆனால் இது பற்றியெல்லாம் சிறிதளவும் ஆராயாமல் ஒட்டுமொத்தமாக 'வெறும் வாயில் சுட்ட வடையா வேளாண் பட்ஜெட்' என்றும் 'ஏமாற்றம் தந்த வேளாண் பட்ஜெட்' என்றும் பத்திரிக்கைகளில் வெளியிடுவது வேளாண்மையை முன்னேற்றுவதற்கு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முயற்சியினை கேலி செய்வதாக உள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-
வார்த்தை மாறாத திட்டங்கள்:
வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அமைச்சர் பெருமக்கள் குறிப்பாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் விவசாய சங்கங்கள், உற்பத்தி உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள், ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை எல்லாம் தொகுத்து ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையும் தயார் செய்து சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதனிடையே கடந்த வேளாண் பட்ஜெட்டில் வாசித்த பல திட்டங்கள் இந்த ஆண்டிலும் வார்த்தை மாறாமல் அமைச்சர் படித்திருக்கிறார் என்ற கூற்று சரியாகாது. உண்மைக்கு மாறான செய்தியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வேளாண் நிதி நிலை அறிக்கையில் ஆண்டு வாரியாக நிதி ஒதுக்கீடு :
2020-21 ஆம் ஆண்டில் வேளாண்மைக்கென ஒதுக்கப்பட்ட நிதி ரூ.11,894.48 கோடி மட்டுமே. கடும் நிதி நெருக்கடியிலும் இவ்வாண்டு ரூ.14,254.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள 23 லட்சத்திற்கும் மேற்பட்ட வேளாண் பம்பு செட்டுகளுக்கான மின் கட்டணத்தையும் மாநில அரசே செலுத்தும் வகையில் கடும் நிதி பற்றாக்குறை இருந்த போதிலும், 2021-22 ஆம் ஆண்டில் ரூ.4508.23 கோடியும், 2022-23 ஆம் ஆண்டில் ரூ.5157.56 கோடியும் ஒதுக்கப்பட்டது. நடப்பு 2023-24 ஆம் ஆண்டில் ரூ.6,536 கோடி ஒதுக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் நிலத்தடி நீரை முழுவதுமாகப் பயன்படுத்தி சாகுபடி செய்ய ஏதுவாயிற்று.
இதையெல்லாம் முறையாகப் புரிந்து கொள்ளாமல் உழவருக்கு தனி பட்ஜெட் என்பதையே ஏமாற்று வேலையாக பார்க்கிறோம் என்ற கூற்று மிகவும் அபத்தமானது என தெரிவித்துள்ளார்.
மதிப்புக்கூட்டலுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்பது தவறான கூற்று:
பயிர் சாகுபடி மட்டுமல்லாது அறுவடைக்குப் பின் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி, விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வரசு செயல்பட்டு வருகிறது.
அதன்படி, அனைத்து விதமான பயிர்களுக்கும் திட்டங்களை அறிவிக்கும் போது அறுவடைக்குப் பின்பு, மதிப்புக்கூட்டலுக்கும் முக்கியத்துவம் தந்து, போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் மதிப்பு கூட்டி விற்பனை செய்ய சிறுதானிய பதப்படுத்தும் மையங்களுக்கு மானியம், பழங்குடியின விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டி விற்பனை செய்திட 70 சதவீத மானியம், எண்ணெய் வித்துக்கள், மிளகாய், கறிவேப்பிலை, முருங்கை, பலா, பனைபொருட்கள் போன்ற விளைபொருட்களை உரிய தரத்துடன் மதிப்புக்கூட்டுவதற்கும், பொதுவாக மதிப்புக்கூட்டுதல், சிப்பம் கட்டுதல். ஏற்றுமதிக்கு பயிற்சி, வட்டாரத்திற்கு ஒரு வேளாண் விஞ்ஞானி போன்று பல்வேறு வகைகளில் மதிப்புக்கூட்டலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
இது பற்றி எதுவுமே தெரியாமல் நிதிநிலை அறிக்கையை முழுவதுமாக படிக்காமல், மதிப்புக்கூட்டல் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்று கூறுவது உண்மைக்கு புறம்பான செய்தி.
பொதுமக்களிடையே தனக்கென தனி இடம் பெற்றுள்ள பத்திரிக்கைகள் இது போன்று அரசை அவமதிக்கும் வகையிலான வார்த்தைகளை உபயோகிப்பது செய்தி வெளியிடுவதும், ஒருசிலரின் கருத்துக்களை, ஒட்டுமொத்த விவசாயிகளின் கருத்தாக வெளியிடுவதும் வருந்தத்தக்கதாக உள்ளது என அமைச்சரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
மூளை மந்தமா இருக்கா.. இந்த 3 யோகா போதும்- யாரெல்லாம் செய்யக்கூடாது?
Share your comments