தக்காளி விலை குறைந்து வரும் அதே வேளையில் மதுரையில் வெங்காயத்தின் விலையும் குறையத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விண்ணை முட்டும் அளவுக்கு தக்காளி உட்பட பல காய்கறிகளின் விலை உயர்ந்து வந்த நிலையில், மதுரையில் சின்னவெங்காயம் விலை சற்று குறைந்துள்ளது. முதல் ரக சின்ன வெங்காயத்தின் விலை இன்னும் 100 ரூபாய்க்கு மேல் உள்ள விற்கப்பட்டு வரும் நிலையில், மதுரையில் இரண்டாம் ரக சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.90 ஆக குறைந்துள்ளது.
இதே போல், தக்காளியின் விலையும் நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையானது. வெங்காயத்தின் வரத்து குறைந்ததால், கடந்த மாதத்திலிருந்தே மதுரையில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. ஜூன் மாதம் முழுவதும் ஒரு கிலோவுக்கு ரூ.80- ஆக விற்று வந்த நிலையில் இம்மாத மத்தியில் மதுரை மத்திய மார்க்கெட்டில் கிலோ ரூ.170 வரை உயர்ந்தது. ஜூலை மாத இறுதியில், மீண்டும் விலை குறையத் தொடங்கியுள்ளது.
மதுரையில் உள்ள மத்திய மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் சின்னமயன் முன்னணி நாளிதழ் ஒன்றிடம் கூறியதாவது- மாவட்டத்தில் பல பகுதிகளில் ஏற்கனவே அறுவடை சீசன் நடந்து வரும் நிலையில், மைசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் வெங்காய வரத்து சற்று அதிகரித்துள்ளது, விலை வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளது. வரும் நாட்களில் வரத்து அடிப்படையில் சந்தை விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒப்பீட்டளவில், தக்காளியின் விலை வாரம் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளது. திங்கள்கிழமை, ஒரு கிலோ தக்காளி ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது” என்றார்.
சிறிது சரிவுக்குப் பிறகு, பீன்ஸ் விலை மீண்டும் 100 ரூபாயைத் தாண்டியதாகவும், மிளகாய் விலை கிலோவுக்கு 50 - 70 ரூபாய்க்கும், கத்தரி, உருளைக்கிழங்கு உட்பட பிற காய்கறிகளின் விலைகள் 50 ரூபாய்க்கு மேலும் விற்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து இயற்கை காய்கறி விவசாயி ராமர் கூறுகையில், ”காய்கறிகளுக்கு அதிக விலை கிடைப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், அறுவடை துவங்கிய பின் விலை குறைய வாய்ப்புள்ளது. பெரும்பாலான காய்கறிகள் எளிதில் கெட்டுப்போகும் என்பதால், விவசாயிகளால் அவற்றை நீண்ட நாள் வைத்திருக்க முடியாது. சந்தை விலை ஏற்ற இறக்கத்தால், நுகர்வோர் தவிர, விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்” என்றார்.
தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய காய்கறிகளை குறைந்தப்பட்ச ஆதார விலையில் அரசே கொள்முதல் செய்ய முன்வந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற இழப்பினை சரிசெய்து அவர்களின் வாழ்வாதாரத்தினை நிலையாக வைத்திருக்க இயலும் என பல்வேறு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
புதிய காற்றழுத்த தாழ்வு- 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
மானியத்தில் வேளாண் கருவி வாங்குவதில் புதிய மாற்றம்- அமைச்சர் அறிவிப்பு
Share your comments