அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மானிய கோரிக்கை தொடர்பான கேள்விக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்ச்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைப்பெற்று வருகிறது இதில் நேற்று (மார்ச் 29) போக்குவரத்துத் துறை மற்றும் இயக்கூர்திகள் சட்டங்கள் - நிர்வாகத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
ஓய்வு வயது குறைக்கப்படுமா?
கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக அதிகரிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், நடத்துநர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைக்க முதல்வரிடம் கலந்தலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்ட போது ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பலர், பல மணி நேரம் தொடர்ந்து பணியாற்றுவதால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பல்வேறு தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுவதாகவும், 58 வயதிலேயே பணி ஓய்வு அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர். கோரிக்கை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மானியக்கோரிக்கையில் தெரிவித்த முக்கிய அறிவிப்புகள்:
- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்கென 4 இருக்கைகள் பிரத்யேகமாக ஒதுக்கப்படும்.
- அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள உணவகங்களை நடத்துவதற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள பணியாளர்கள் ஓய்வு அறைகளுக்கு குளிர்சாதன வசதியை ஏற்படுத்தப்படும்.
- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் புதிய பணிமனை பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் ரூ.3.55 கோடியில் புதிய பணிமனை அமைக்கப்படும்.
- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் ஆவடி பேருந்து பணிமனை மற்றும் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும்.
- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் வழக்கமாக பயணிக்கும் பயணிகளுக்கு பயணச் சலுகை அறிமுகப்படுத்தப்படும்.
- அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிமனை அளவில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு இறுதி தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ மாணவியருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.
- அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இயக்கூர்திகள் சட்டங்கள்- நிர்வாகம்:
தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினை பிரித்து ஆலங்குளம் தாலுக்காவில் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலம் அமைக்கப்படும். அதைப்போல் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினை பிரித்து ராஜபாளையம் தாலுக்காவில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலம் அமைக்கப்படும்.
பொதுமக்கள் நலன்கருதி அரசின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 91 வாட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 54 மோட்டார் வாகன ஆய்வாளர் (பகுதி) அலுவலகங்களை உள்ளடக்கிய மொத்தம் 145 அலுவலகங்களில், ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டு 145 எண்ணிக்கையில் இலகு ரக மோட்டார் வாகனங்கள் (LMV-Motor Car) கொள்முதல் செய்யப்படும். தமிழ்நாட்டில் உள்ள 20 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வுத்தளம் அமைக்கப்படும்.
சாலை விபத்தில் காயம் அடைந்த நபர்களுக்கு உதவும் நற்கருணை (GoodSamaritian) ஊக்குவிக்கும் வகையில் ஏற்கெனவே மத்திய அரசால் வழங்கப்படு வந்த ரூ.5000 தொகையுடன் மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதல் தொகையாக ரூ.5000 வழங்கப்படும். ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வராமலேயே (நேரடி தொடர்பின்றி) குடிமக்களுக்கு சேவைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
தமிழக சுற்றுலாத்துறைக்கு ஒன்றிய அரசின் விருது- செய்த சாதனை என்ன?
இன்னும் 2 நாள் தான்- அக்னிவீர் பணிக்கு ஆட்சேர்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
Share your comments