1. செய்திகள்

நெல்லை உலர வைப்பதில் சிரமம்: ஈரப்பதம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
paddy procurement

டெல்டா மாவட்டங்களில் 17% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்யப்படுவதை தொடர் மழை மற்றும் பனி மூட்டத்தின் காரணமாக 22% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்திடுமாறு ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையானது இயல்புக்கு அதிகமாகவே பல்வேறு மாவட்டங்களில் பெய்த நிலையில், தமிழகம் முழுவதும் பனியின் தாக்கமும் கடந்த சில மாதங்களாக அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் நெல் விளைவித்த விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரங்கள் பின்வருமாறு-

நெல் கொள்முதல் திட்டம்:

தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2002– 2003 காரிஃப் பருவம் முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முகவராக செயல்பட்டு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் நாள் முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

வடகிழக்குப் பருவமழை காரணமாக செப்டம்பர் மாதம் முதல் நாளிலிருந்து கொள்முதல் செய்தால் டெல்ட்டா விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் அடிப்படையில் 2022- 2023 காரிஃப் சந்தைப் பருவத்திலிருந்து செப்டம்பர் முதல் நாளிலிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

01.09.2024 முதல் 17.01.2025 வரை 1349 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 80,634 விவசாயிகளிடமிருந்து 5,72,464 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 1378 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கு எண்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், நாளது தேதி வரை ஒன்றிய அரசு அனுமதித்துள்ள 17% ஈரப்பதத்தில் தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

நெல்லை உலர வைப்பதில் சிரமம்:

இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு காலதாமதமாகத் தொடங்கியதாலும் தொடர்ச்சியாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதாலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக விட்டு விட்டு கனமழை பெய்துள்ளதாலும் அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளதாலும் வானம் மேகமூட்டத்துடனும், தொடர்ந்து பனிப்பொழிவுடனும் உள்ளதால் விவசாயிகள் நெல்லினை உலரவைக்கச் சிரமப்படுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அதிக ஈரப்பதத்தில் உள்ள நெல் மணிகளைக் கொள்முதல் செய்ய விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்துள்ளனர்.

அந்த வகையில் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தற்போது 17% ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதைத் தளர்வு செய்து 22% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Read more:

மருந்தாளுநர் டூ முழு நேர இயற்கை விவசாயம்: பல பயிர் சாகுபடியில் அசத்தும் கென்னடி

நெற்பயிருக்கான உரம் டூ கால்நடை தீவனம்: அசோலாவின் தன்மை என்ன?

English Summary: Tamil Nadu Government Writes to Union Government to Purchase Paddy with 22 percent Moisture Published on: 21 January 2025, 04:09 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.