ஜவுளித் துறையை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை தயாரிப்பு பூங்காக்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமரின் அறிவிப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 2021 இல், ஒன்றிய ஜவுளி அமைச்சகம் 7 PM MITRA ((PM Mega Integrated Textile Region and Apparel) பூங்காக்களை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த திட்டத்திற்காக மொத்தம் 4,445 கோடி வழங்கப்பட உள்ளது. மித்ரா திட்டம் 2021-22 பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் முதலில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளுடன் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஏழு மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான அரசாங்கத்தின் பார்வையை நனவாக்குவதில் PM MITRA ஒரு முக்கிய படியாகும் என கூறப்பட்டது. இத்திட்டம் பிரதமரின் 5F vision-ன் அடித்தளம் எனவும் குறிப்பிடப்பட்டது.( 5F vision- Farm to Fibre to Factory to Fashion to Foreign)
இந்த PM MITRA ஜவுளி பூங்காவிற்காக இந்தியாவிலுள்ள 13 மாநிலங்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். அவற்றில் மாநிலத்தில் தற்போதுள்ள சுற்றுச்சூழல், ஜவுளி/தொழில் கொள்கை, உள்கட்டமைப்பு, பயன்பாட்டு சேவைகள் போன்ற பல்வேறு காரணிகளை கணக்கில் எடுத்துக்கொண்டு புறநிலை அளவுகோல்களின் அடிப்படையில் 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் பி.எம். மித்ரா திட்டத்தின் கீழ் மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற செய்தியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.
PM MITRA பூங்காக்கள், வெளிநாட்டின் நேரடி முதலீடு (FDI) உட்பட பெரிய அளவிலான முதலீட்டை ஈர்க்கும் மற்றும் ஜவுளித்துறைக்குள் புதுமையான மாற்றங்களை உண்டாக்கி உலகத்தரம் வாய்ந்த தொழில்துறை உள்கட்டமைப்பை உருவாக்க உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் 7 மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை தயாரிப்பு பூங்காக்கள் அமைக்கப்படும்.இந்த பூங்காக்கள் மூலம் 70,000 கோடி அளவிலான முதலீடு மற்றும் 20 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜவுளி பூங்கா அமைக்க தமிழகத்தின் விருதுநகரை தேர்வு செய்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நன்றியினை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
வனத்துறையில் என்ன புதிய திட்டங்களை கொண்டு வரலாம்? அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
42 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி- எந்த கிராமத்தில், எந்த ஏரி? முழுப்பட்டியல் இதோ
Share your comments