ஆவின் நிர்வாகத்தின் தயாரிப்புகளுள் ஒன்றான பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் விலையினை 20 முதல் 100 ரூபாய் வரை உயர்த்தி ஆணை வெளியாகி உள்ளது. எதிர்ப்பாராத இந்த விலையேற்றத்தினால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனமானது சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் பல்வேறு வகையான பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் விலையினை ரூ.20 முதல் ரூ.100 வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பன்னீர் (1 கிலோ) 450 ரூபாயிலிருந்து 550 ரூபாய் ஆகவும், பன்னீர் (500 கிராம்) 250 ரூபாயிலிருந்து 300 ரூபாயகவும், பன்னீர் (200 கிராம்) 100 ரூபாயிலிருந்து, 120 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைப் போன்று பாதாம் மிக்ஸ் (200 கிராம்) 100 ரூபாயிலிருந்து 120 ரூபாயாகவும் உயர்த்தி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வானது இன்று முதல் (25/07/2023) நடைமுறைக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட தயாரிப்பு விலைகளை அனைத்து பில்லிங்/புராஜெக்ட் சாஃப்ட்வேர் மற்றும் தேவைப்படும் இடங்களில் இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஒருபுறம் ஆவின் நிறுவன தயாரிப்புகளின் விலை உயரும் நிலையில், இன்றளவும் பால் கொள்முதல் விலை தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வராமல் உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமப்புற விவசாயிகளுக்கு இரண்டாவது வருமான ஆதாரமாக இருந்து வருபவை பால் பண்ணை. 2022-23 ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத சவால்களை ஆவின் எதிர்கொண்டு வருகிறது. ஆவின் நிறுவனத்துடன் தொடர்புடைய பால் பண்ணையாளர்களில் ஒரு பகுதியினர் தங்களது உற்பத்திப் பொருட்களை தனியார் பால் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்க தொடங்கிவிட்டனர்.
ஆவின் நிறுவனம் பசும்பாலினை லிட்டருக்கு ரூ.35-க்கும், எருமைப்பாலினை லிட்டருக்கு ரூ.44-க்கும் கொள்முதல் செய்யும் நிலையில், தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.6 முதல் ரூ.8 வரை கூடுதலாக வழங்குகின்றன.
பசும்பால் உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.55 செலவாகிறது என்று பால் உற்பத்தியாளர்கள் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கொள்முதல் விலையினை உயர்த்தக்கோரி சமீபத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அச்சமயங்களில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலும் குறைந்தது.
அண்மையில் மாற்றப்பட்ட தமிழ்நாடு அமைச்சரவையில், புதிய பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்றார். ஆவின் நிறுவனம் சார்பில் இனிப்புகள், ஐஸ்கீரிம் போன்றவை தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் தண்ணீர் பாட்டில் திட்டமும் தொடங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பால் கொள்முதல் விலை தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் காண்க:
PhonePe செயலியில் அட்டகாசமான அறிமுகம்- வரி செலுத்துபவர்களின் கவனத்திற்கு
Share your comments