கடந்த ஒரு மாதக்காலமாக எகிறிக் கொண்டிருந்த தக்காளி விலை, கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த ஆறு நாட்களில் மட்டும் கிலோவுக்கு விலை 60-80 ரூபாய் வரை குறைந்துள்ளது.
இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி, வெங்காயம் உட்பட அத்தியாவசிய காய்கறிகளின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியானது தக்காளியின் மூன்று ரகங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது தக்காளி ரகங்கள் முறையே ரூ.60 மற்றும் ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேப்போல் முதல் ரக தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் படிப்படியாக அதிகரித்து வந்த தக்காளியின் விலை ஒரு கட்டத்தில் கிலோவுக்கு ரூ,200 வரை நெருங்கியது குறிப்பிடத்தக்கது.
பருவம் தவறி பெய்த பருவமழை காரணமாக தக்காளி மற்றும் இதர காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்தன. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் தக்காளி வரத்து இப்போது அதிகரித்துள்ளதால் விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை வியாபாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
முன்னதாக இந்த ஆண்டு கோடையில் நிலவிய கடும் வெப்பத்தினாலும், முந்தைய பருவத்தில் தக்காளிக்கு சந்தையில் போதிய விலை கிடைக்காத காரணத்தினாலும் நடப்பு பருவத்தில் விவசாயிகள் தக்காளியினை பயிரிட ஆர்வம் காட்டவில்லை. இதே சமயத்தில் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்ததாலும், கடந்த ஒரிரு மாதமாக தக்காளி விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் 62 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளியானது ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இருப்பினும் வெளிச்சந்தையில் விலை குறையவில்லை. இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக வடசென்னையில் 32 ரேசன் கடைகளிலும், தென் சென்னையில் 25 ரேசன் கடைகளிலும், மத்திய சென்னையில் 25 ரேசன் கடைகளிலும் என மொத்தம் 82 நியாய விலைக்கடைகள் மூலமாக தக்காளி விற்பனை தொடங்கப்பட்டது.
இதைப்போல் ஒன்றிய அரசின் தலையீட்டால், நாட்டின் வடமாநிலங்களிலும் தக்காளி விலை ஏற்கனவே சரிவை சந்திக்கத் தொடங்கியுள்ள நிலையில் கடந்த ஐந்தே நாட்களில் சில்லரை விலையில் 30 முதல் 100 ரூபாய் வரை குறைந்துள்ளது. தக்காளியை கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்ய முக்கிய நகரங்களில் கூட்டுறவுக் குழுக்கள் மூலம் ஸ்டால்களை ஒன்றிய அரசு அமைத்துள்ளது.
உணவு மற்றும் பதப்படுத்துதல் அமைச்சகத்தின் விலைக் கண்காணிப்புப் பிரிவின் கூற்றுப்படி, டெல்லியில் தக்காளியின் விலை கிலோவுக்கு 30 ரூபாய் குறைந்துள்ளது. தக்காளியின் விலை குறைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
மேலும் காண்க:
மாதவிடாய் நின்ற பெண்களின் ஆரோக்கியத்திற்கு பூசணி விதைகள்!
எழும்பூர்- கிண்டி உட்பட சென்னையில் நாளை பல பகுதியில் மின்தடை
Share your comments