முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டில் பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு 2 இலட்சம் கறவை மாடுகள் கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மனோ தங்கராஜ் இன்று (17.05.2023) சேலம், ஆவின் பால்பண்ணை வளாகத்தில் உள்ள பால்பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்குப்பின், பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்த விவரங்கள் பின்வருமாறு-
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டில் பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு 2 இலட்சம் கறவை மாடுகள் கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இக்கடனுதவிகள் உள்ளூர் வங்கிகள் மூலமாக வழங்கப்படும். மேலும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் கறவை மாடுகளுக்கு காப்பீடு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையே பாலமாக விளங்குகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பால் உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் ஆவின் நிறுவனத்தில் பணியாற்றுகின்ற 30,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களின் வாழ்வாதாரங்களும் பால்வளத் துறையைச் சார்ந்தே உள்ளன. எனவே, இன்றைய தினம் சேலம், ஆவின் பால்பண்ணை வளாகத்தில் உள்ள பால்பண்ணை பிரிவுகள் ஆய்வு செய்யப்பட்டது.
ஆவின் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதில் ஒன்று பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பதாகும்.
ஆவின் என்பது ஒரு சேவை நிறுவனம். இங்கு கூடுதல் விலை வைத்து வாடிக்கையாளர்களுக்கு பால் விற்கமுடியாது. ஆவின் நிறுவனத்திற்கு விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் மூலம் உற்பத்தி செய்யும் பால் ஆண்டுதோறும் எவ்வளவு கொடுத்தாலும் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஆவின் நிறுவனத்தினை மேம்படுத்துவதற்குத் தடையாக உள்ள சவால்கள், மற்றும் பலவீனங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதனைத்தொடர்ந்து, விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் மூலம் பால் உற்பத்தியை பெருக்குவதற்கு தீவனங்களைக் குறைந்த விலையில் கொடுப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சரின் கனவான தமிழ்நாட்டில் வெண்மைப் புரட்சியை மேம்படுத்தும் விதமாக பால் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். மேலும் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வின்போது, பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மரு.ந.சுப்பையன், இ.ஆ.ப., சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், இ.ஆப., சேலம் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் உட்பட ஆவின் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
pic courtesy: manothangaraj TN minister fb
மேலும் காண்க:
40 விவசாயிகளுக்காக காளான் நிதி திரட்டல்- திட்டத்தின் முழு விவரம் காண்க
Share your comments