விவசாயப் பத்திரிக்கையான கிரிஷி ஜாக்ரனில் சுதந்திரத் தினக் கொண்டாட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: கோலாகலக் கொண்டாட்டம், தென்பெண்ணை ஆற்றில் மிதக்கும் நுரை: கிருஷ்ணகிரி விவசாயிகள் அச்சம், அம்மா உணவகங்கள் மூலம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி தொடக்கம், ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம்: கொள்ளிடம் கரைகளில் குவியும் மக்கள், மின் கட்டணம் உயர்வு: விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம், மேட்டூர் அணையிலிருந்து 32,000 கன அடி நீர் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கை ஆகியவை குறித்த தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: கோலாகலக் கொண்டாட்டம்!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலர்க்கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்கக் கண்காட்சி ஆகியவை இன்று தொடங்கியது. இவற்றை சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ கே. பொன்னுசாமி தொடக்கி வைத்தார். மலர் கண்காட்சியில் 75 ஆயிரம் மலர்களைக் கொண்டு மாட்டு வண்டி, வண்ணத்துப்பூச்சி, வில் அம்பு, தேனீ முதலான உருவங்கள் பூக்களாலேயே வடிவமைக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், படகு குழாமில் மூன்று புதிய படகுப் போக்குவரத்தும் தொடங்கி வைக்கப்பட்டு நடந்துவருகிறது.
மேலும் படிக்க: TN CM Scheme: புதுதொழில் நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் நிதி!
தென்பெண்ணை ஆற்றில் மிதக்கும் நுரை: கிருஷ்ணகிரி விவசாயிகள் அச்சம்!
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் தென்பெண்ணை ஆற்றில் இரசாயன நுரைகள் அதிக அளவு செல்கிறது. இரசாயன நுரைகளுடன் துர்நாற்றம் வீசுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இரசாயனக் கழிவுநீர் கலந்து வருவது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: தருமபுரி ஆட்சியர் அறிவிப்பு!
அம்மா உணவகங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி தொடக்கம்!
தமிழகத்தில் 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட இருக்கின்றது. 1,545 பள்ளிகளில் படிக்கும் 1,14,095 மாணவ-மாணவிகளுக்குக் காலை உணவு வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல் கட்டமாக சென்னையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டியினை அம்மா உணவகத்தில் இருந்து தயாரித்து வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம்! : கொள்ளிடம் கரைகளில் குவியும் மக்கள்
ஆடிப்பதினெட்டாம் நாளான இன்று ஆடிப்பெருக்கு வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் காவிரி கரையின் இருபுறமும் திரளும் டெல்டா மாவட்ட மக்கள் பூ, பழம், மஞ்சல், காதோலை, கருகமணி உள்ளிட்ட பொருட்களை வைத்து காவிரித்தாயினை வழிபட்டனர். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், குடமுருட்டி அய்யாலம்மன், ஓரட்த்துரை ஆற்றழகிய சிங்கர் ஆகிய படித்துறைகளில் ஏராளமான மக்கள் கூடி ஆடிப்பெருக்கு விழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மின் கட்டணம் உயர்வு: விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். விசைத்தறிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை அரசு மானியமாக வழங்க வேண்டும் எனக் கோரி வருகின்ற ஆகஸ்டு 8-ஆம் தேதி திங்களன்று ஒரு நாள் விசைத்தறிகளை அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து 32,000 கன அடி நீர் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கை!
சேலம் மேட்டூர் அணையிலிருந்து 32 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக, 50 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றப்பட உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல தேசிய பேரிடர் மேலாணமை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க
Share your comments