திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மட்காத குப்பைகளை நேரடியாக வீடுகளுக்கே சென்று, பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளும் அசத்தலான திட்டத்தினை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். ‘குப்பையையும் பணமாக்குவோம், மண்ணை வளமாக்குவோம்’ என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு திருப்பூரைச் சேர்ந்த ‘தி மணி பின்’ என்னும் அமைப்புடன், திருச்சி மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து, இந்த புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இத்திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்கள், அலுமினியம், இரும்பு, எவர்சில்வர், உலோகத்தால் ஆன பொருட்கள், பழைய எலக்ட்ரிக் சாதனங்கள், புத்தகங்கள், அட்டைப் பெட்டிகள், பேப்பர் என அனைத்திற்கும் அதற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள பணத்தைக் கொடுத்து எடுத்துக்கொள்ள இருக்கிறார்கள். ஒரு கிலோ பழைய பொருட்களுக்கு 12 ரூபாய் முதல், பொருளுக்கு ஏற்றார் போல் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனின் சொந்த வார்டான 27-வது வார்டில் உள்ள பட்டாபிராமன் சாலையில், இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சியின் மேயர் அன்பழகனிடம் பேசியபோது, “இத்திட்டத்தின் மூலம் மட்காத குப்பைகள், மட்கும் குப்பைகளுடன் கலப்பது குறைத்திடலாம். மேலும், மட்காத குப்பைகளை பொதுமக்களிடம் பெற்று மறுசுழற்சி செய்வதால், சூழல் மாசுபாடுவதும் குறையும். 15 நாட்களுக்கு ஒருமுறை 'தி மணி பின்' அமைப்பினர் பொதுமக்களிடமிருந்து, இந்த மட்காத குப்பைகளை வாங்கிக் கொள்வார்கள். இந்தத் திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களையும், ஈடுபடுத்த உள்ளோம். சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், இந்த மட்காத குப்பைகளை வீடுகளில் இருந்து பெற்று ‘தி மணி பின்’ அமைப்பிடம் கொடுத்தால், அவர்களுக்கு ஒரு கிலோவுக்கு 5 ரூபாய் வழங்கப்படும் என்பது குறிப்பிடதக்கது. மக்கள் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பதோடு, மட்காத குப்பைகள் ஏற்படும் சூழல் மாசுபாடுகளை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
மேலும் படிக்க: பிரதம மந்திரி வய வந்தனா திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகம் முழுவதும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் முயற்சி தீவிரமடைந்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மை துணைச் சட்டம், 2019ன் கீழ் உள்ள விதியை அமல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளதால், வீட்டுக் குப்பைகளை தரம் பிரிக்கத் தவறியதற்காக, நகரவாசிகள் விரைவில் ரூ. 100 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். குப்பை கிடங்களுக்கு அனுப்பப்படும் குப்பைகளை குறைக்க, இது முக்கிய படியாகும்.
மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுத்து, மக்கும் குப்பைகளை, உங்கள் வீட்டு தோட்டத்திற்கு உரமாக்கிடுங்கள், மேலும் இதனால் வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை பயக்கும்.
மேலும் படிக்க:
Share your comments