
தமிழ்நாடு அரசு, கோனோகார்பஸ் (Conocarpus) மரத்தை சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படுத்தும் தீங்குகளைக் காரணம் காட்டி தடை செய்துள்ள நிலையில் அதனை வரவேற்பதாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
காம்பிரேடேசி குடும்பத்தைச் சேர்ந்த கோனோகார்பஸ் இனம் வெப்பமண்டல நாடுகளுக்கு உகந்தது. ஒரு அலங்கார தாவரமாக கருதப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில், சாலைகள், பொதுத் தோட்டங்கள், குழந்தைகள் பூங்காக்கள் ஆகியவற்றின் மைய நடுவில் பரவலாக நடப்பட்டு வந்தது.
கோனோகார்பஸ் நன்மையும்- தீமையும்:
இந்த மரத்தில் ஆண்டு முழுவதும் அடர் பச்சை இலை இருக்கும். கடுமையான சுற்றுச்சூழல் நிலைமைகளைத் தாங்கி வளருவதோடு, மண் மற்றும் காலநிலை நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் திறன் கொண்டதாகவும் விளங்குகிறது. மாநில அரசால் தொடங்கப்பட்ட பல்வேறு நகர்ப்புற பசுமை முயற்சிகளில் இது ஒரு விருப்பமான மரத்தேர்வாக இருந்தது.
நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும், கால்நடைகள் அதன் இலைகளை உண்பதில்லை, தேனீக்களும் அவற்றைத் தவிர்க்கின்றன. இந்த இனம் மனிதர்களுக்கு சளி, இருமல், ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற நோய்கள் ஏற்படுத்தக்கூடும் என அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஏற்கெனவே குஜராத், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கோவா போன்ற மாநிலங்கள் இதைத் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தடை உத்தரவுக்கு வரவேற்பு:
காடுகள் மற்றும் வனம் அல்லாத பகுதிகளில் அயல்நாட்டு கோனோகார்பஸ் தாவரங்களை நடுவதை நிறுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
கோனோகார்பஸை தடை செய்யக் கோரி மாநில அரசிடம் மனு அளித்த சமூக ஆர்வலர் மைக்கேல் அன்டோ ஜெனியஸ் இந்த உத்தரவை வரவேற்று உள்ளார். இதுக்குறித்து முன்னணி நாளிதழ் ஒன்றிடம் கூறுகையில், "இந்த இனங்களை விரைவில் நடுவதை நிறுத்த உத்தரவுகளை பிறப்பித்ததற்காக நாங்கள் அரசாங்கத்திற்கு நன்றி கூறுகிறோம். இல்லையெனில், சீமை கருவேலம் மரங்களைப் போலவே இது சுற்றுச்சூழலையும் கடுமையாக சேதப்படுத்தியிருக்கும்," என்றார்.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ் நாடு அரசால் தடைசெய்யப்பட்டிருக்கும், இந்த கோனோகார்பஸ் மரத்தின் மகரந்தம் காற்றில் பரவும் போது, தும்மல், இருமல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய்கள் உருவாகின்றது. இதனால் மக்கள் பெரும் அவதியுறுகின்றனர்."
"தமிழ்நாடு அரசு இதனை கருத்தில் கொண்டு, இந்த மரங்களை நடவு செய்வதை தடை செய்துள்ளது. மேலும், பொது இடங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவ வளாகங்கள், அரசு நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வன நிலங்களில் உள்ள கொனோகார்பஸ் மரங்களை அகற்றிட உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு வனத்துறை. அத்துடன், இந்த நச்சு மரத்தை அகற்றிய பிறகு அந்த இடத்தில் நட்டு வளர்க்க நாட்டுமரக்கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கவும் அரசு முன்வந்துள்ளது பாரட்டுக்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.
தங்கள் வளாகத்தில் உள்ள கோனோகார்பஸ் தாவரங்களை மாற்ற விரும்பும் தனியார் நிறுவனங்கள், பசுமை தமிழ்நாடு மிஷனை நேரடியாக 18005997634 என்ற கட்டணமில்லா எண் மூலமாகவோ அல்லது "GTM ஒரு மரம் நடவும்" விண்ணப்பம் மூலமாகவோ தொடர்பு கொண்டு, மாற்று மரத்திற்கான இலவச பூர்வீக மரக்கன்றுகளைப் பெறலாம்.
Read more:
வேளாண் தொழில் முனைவோர்களுக்காக தேனி மாவட்ட KVK எடுத்த முன்னெடுப்பு!
வேளாண் தொழில் முனைவோருக்கு குட் நியூஸ்- StartupTN உடன் COXBIT புரிந்துணர்வு ஒப்பந்தம்
Share your comments