
தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின மூலமாக வேளாண்மை, தோட்டக்கலை, மண்ணியல், பூச்சி மேலாண்மை, வேளாண் விரிவாக்கம் மற்றும் மனையியல் சார்ந்த தொழில்நுட்பங்கள் அந்தந்த துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.
விவசாயிகள் மற்றும் பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விதமான திறன் மேம்பாட்டு பயிற்சிகள், கண்டுணர்வு முகாம்கள், கண்காட்சிகள், அரசுத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.
பெண் தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம்:
வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் 250-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் உருவாக்கப்பட்டுள்ளனர். இதில் 80 சதவிகித்திற்கும் மேற்பட்டவர்கள் பெண் தொழில் முனைவோர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொழில் முனைவோர்கள் தங்களின் தொழிலை புதியதாக தொடங்குவதற்கும் மற்றும் தொடங்கப்பட்டதை விரிவுப்படுத்துவதற்கும் மாவட்ட தொழில் மையம் மற்றும் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மூலமாக 1.5 கோடிக்கும் மேலாக மானியத்துடன் தொழிற்கடன் பெற வழிகாட்டப்பட்டுள்ளது. தொழில் முனைவோர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கான வழிவகையும் செய்து தரப்பட்டுள்ளது.
மாதந்திர தொழில் முனைவோர்கள் சந்திப்பு:
உலக தேனீக்கள் தினமான மே 20 ஆம் நாளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதி மாதாந்திர தொழில் முனைவோர்கள் சந்திப்பு தேனி வேளாண் அறிவியல் மையத்தில் நடைப்பெற்று வருகிறது. இதன் முக்கிய நோக்கமாவது புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கவும் மற்றும் உருவாக்கப்பட்ட தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டுதலாகும். மேலும் நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் சகோதரத்துறை திட்டங்கள், நிதிசார் அரசுத்திட்டங்கள், மானியங்கள் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள், உதவிகள் மேலும் இணையவழி விற்பனைக்கான வழிகாட்டுதல்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
மாதந்திர தொழில் முனைவோர்கள் சந்திப்பு கூட்டத்தில் பல்துறை அரசு அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள், மூத்த தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தும் வருகிறார்கள். மேலும் இந்நிகழ்வில் வெற்றிக்கதைகளும், தொழில் முனைவோர்களால் பகிரப்பட்டு வருகின்றன.
Read also: cattle feed Azolla: அசோலா வளர்ப்புக்கு ஏற்ற சூழ்நிலைகள் என்ன?
தனித்துவமான உற்பத்தி பொருட்கள்:
இம்மையத்தால் உருவாக்கப்பட்ட தொழில்முனைவோர்கள் மூலம் 300-க்கும் மேற்பட்ட விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக செறிவூட்டப்பட்ட மண்புழு உரம், பஞ்சகாவ்யா, காளான் வளர்ப்பு, தேன், தேன் சார்ந்த பொருட்கள், மேலும் தனித்துவமான உடனடி பயன்படுத்தும் உணவுப்பொருட்கள், மூலிகைப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களையும் தயாரித்து வருகின்றனர்.
புவிசார் குறியீடு கொண்ட கம்பம் பன்னீர் திராட்சைப் பானங்கள், உலர்திராட்சை, ஒரு மாவட்டம் ஒரு விளைபொருள் திட்டத்தில் வாழை சார்ந்த பொருட்கள், பாரம்பரிய அரிசிகள், சிறுதானியப் பொருட்கள், உலர் பழங்கள், உலர் காய்கறிகள், வெற்றிலை பானம், ஊட்டச்சத்துக் கலவைகள், தேன் மற்றும் தேன் சார்ந்த பொருட்கள், காளான் பொருட்கள், சிறுதானிய அடுமனைப்பொருட்கள், உடனடி மூலிகைத் தேனீர் (டிப்டீ), பால், மற்றும் பால் சார்ந்த பொருட்கள், கீரைசூப் வகைகள், சைவ மற்றும் அசைவ ஊறுகாய் வகைகள் போன்ற பொருட்கள் உற்பத்தி செய்து வருகின்றனர்.
தொழில் முனைவோர்களுக்கான விற்பனை அங்காடி:
தேனி மாவட்டம் அரண்மைபுதூரில் ஊட்டச்சத்து மற்றும் நவீன வேதியியலின் தந்தை லவாய்சியர் பெயரில் லவாய்சியர் விற்பனை அங்காடி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. வேளாண் அறிவியல் மையத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட வேளாண் தொழில் முனைவோர்கள் தங்களின் பொருட்களையும் விற்பனை செய்வதற்கு வசதியாக ஏற்பாடும் செய்து தரப்பட்டுள்ளது.
கட்டுரை ஆசிரியர்கள்: தேனி தொழில் முனைவோர்களின் பொருட்களை வாங்க, தேனி மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர்(பொ) பொ.மகேஸ்வரன் (கைபேசி எண்: 9677661410) தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
Read more:
ரூ.754 கோடி மதிப்பிலான ஆர்டர்- சோலார் பம்பிங் சிஸ்டத்தில் அசத்தும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ்
குறைகளை அடுக்கிய விவசாயிகள்- க்ரீன் சிக்னல் கொடுத்த மாவட்ட நிர்வாகம்!
Share your comments