பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ரூ.50,000 மானியம் வழங்கப்பட உள்ளதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார்.
நிலையான உற்பத்தி, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, இயற்கை வள பாதுகாப்பு மற்றும் மண் வள ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் 2023- 2024 ஆம் ஆண்டு பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டம் குழுவாக 400 ஹெக்டேர் மற்றும் தனி விவசாயிகளுக்கு 140 ஹெக்டேர் என மொத்தம் 540 ஹெக்டேரில் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
மூன்று தவணைகளாக 50,000 ரூபாய் மானியம்:
இத்திட்டத்தில் குழுவாக சேர்ந்து பயன்பெற ஒரு கிராமத்தை சேர்ந்தோ அல்லது அருகிலுள்ள கிராமங்களிலுள்ள குறைந்தது 20 விவசாயிகள் சேர்ந்து 20 ஹெக்டேர் கொண்ட தொகுப்பை உருவாக்கி பாரம்பரிய விவசாயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். இத்திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு முதலாம் ஆண்டு ரூ.16,500, இரண்டாம் ஆண்டு ரூ.17,000 மற்றும் மூன்றாம் ஆண்டு ரூ.16,500 என மொத்தம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
மற்றொரு துணை திட்டமாக ஏற்கெனவே பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட்டு வரும் தனி விவசாயிகள், குழுவாக சேர்ந்து பயன்பெற இயலாத விவசாயிகள், வேறு எந்த திட்டத்திலும் பயன் பெறாத பாரம்பரிய விவசாயிகளுக்கு பதிவு கட்டணமாக இத்திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு தலா ரூ.2,000 வீதம் ரூ.6,000 மானியம் வழங்கப்படும்.
பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக சேர்ந்து பயன்பெறும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு முதல் ஆண்டில் குழுவினை உருவாக்கிட ரூ.1,000, குழுவின் தகவல் சேகரித்து பராமரித்திட ரூ.1,500, மண்டல ஆலோசனை மற்றும் பதிவு கட்டணமாக ரூ.700, பாரம்பரிய விவசாயம் செய்திட ஊக்கத்தொகை ரூ.12,000 மற்றும் விளம்பர செலவினங்களுக்கு ரூ.1,300 என மொத்தம் ஒரு ஹெக்டேருக்கு முதலாம் ஆண்டு ரூ.16,500 மானியம் வழங்கப்படும்.
எனவே, அனைத்து வட்டார விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர்கள் அலுவலகங்களை தொடர்பு கொண்டும் பயன்பெறலாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன்,இ,ஆ,ப., தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தின் முக்கிய நோக்கமானது, இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலம் நஞ்சற்ற நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்வது ஆகும்.
மேலும், உள்ளூர் வளங்களின் பயன்பாடு மற்றும் மறுசுழற்சியை ஊக்குவிப்பதன் மூலம் கிராம அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதையும் இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
பசு மாட்டினை பராமரிக்க குறைந்த வட்டியில் கடன்- ஆட்சியர் அறிவிப்பு
Share your comments