
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (23.01.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. அதுத்தொடர்பான செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
ஜனவரி 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) அணைகளில் நீர்நிலை மற்றும் மழை விபரங்கள் குறித்து தெரிவித்தார்கள். கோடைப்பருவ சாகுபடியின் நன்மைகள் குறித்த காணொளி காட்சி ஒளிப்பரப்பப்பட்டது. கடந்த டிசம்பர் 2024 மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 190 மனுக்களுக்கான பதில்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.
காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பாதிப்பு: குழு அமைக்க முடிவு
விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் நீர்வளத்துறை மூலம் சானல்களில் தண்ணீர் வரத்து மற்றும் குளங்களை தூர்வாருதல், நீர்நிலைகளை பராமரித்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற கேள்விகளுக்கு பதில்கள் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. நிலவியல் வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்ற சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தெரிவித்தார்கள்.
மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்த கோரிக்கைக்கு இது தொடர்பாக மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அவர்களுக்கு கருத்துரு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் குத்தகை விவசாயிகள் தங்களது நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வழங்க சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களால் சான்று வழங்க வேண்டி அறிவுறுத்தப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்கள்.
விளைநிலங்களில் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டு இம்மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளை அழிப்பது தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் என மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்கள்.
நீர்ப்பாசன சங்க தலைவர் தேர்தல்:
நீர்ப்பாசன சங்க தலைவர் தேர்தல் விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சங்க தலைவர்களுக்கு அடையாள அட்டை தர வேண்டும் எனவும் வைத்த கோரிக்கைக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் எனவும் சங்க தலைவர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீர்வளத்துறை செயற்பொறியாளர் தெரிவித்தார்கள்.
செண்பகராமன்புதுர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டகை அமைக்க கோரியதற்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட நிதியில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தெங்கம்புதூர் கால்வாயில் பிப்ரவரி 28 வரை தண்ணீர் நீர்ப்பாசனத்திற்கு விநியோகம் செய்யப்படும் என நீர்வளத்துறை செயற்பொறியாளர் தெரிவித்தார்கள்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் பிரசாந்த், இ.வ.ப., நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருள்சன் பிரைட், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜென்கின் பிரபாகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செந்தில்வேல் முருகன் உட்பட மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Read more:
நெல்லை உலர வைப்பதில் சிரமம்: ஈரப்பதம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை
ரூ.754 கோடி மதிப்பிலான ஆர்டர்- சோலார் பம்பிங் சிஸ்டத்தில் அசத்தும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ்
Share your comments