1. செய்திகள்

மேகதாது அணை விவகாரம்- EPS க்கு அழைப்பு விடுத்த அமைச்சர் துரைமுருகன்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
We will defeat the attempt to build mekedatu dam says minister duraimurugan

காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் வழங்குவது மற்றும் மேகதாது அணை பிரச்சனை குறித்து தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி அன்று அளித்த செய்திகளுக்கு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நாம் அனைவரும் மேகாது அணை பிரச்சினையில் ஒற்றுமையாக செயல்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மேகதாது அணை கட்டியே தீர்வோம் என கர்நாடக மாநில துணை முதல்வர் சிவகுமார் கருத்து தெரிவித்ததும், தமிழக அரசியலில் மீண்டும் புயலை கிளப்பியது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசினை கடுமையாக விமர்சித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கு உரிய விளக்கத்தினை அமைச்சர் துரைமுருகன் வழங்கியுள்ளார் அவற்றின் விவரம் பின்வருமாறு-

” காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி இவ்வாண்டும் ஜுன் 12 அன்று குறுவை சாகுபடிக்காக முதல்வரால் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. குறுவை தொகுப்புத் திட்டத்தையும் முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கப்பெற வேண்டிய காவிரி நீரை பெறுவதற்கு தேவையான முயற்சிகளை அனைத்து மட்டங்களிலும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

மேகதாது பிரச்சினை குறித்து அமைச்சரின் விளக்கம்:

” கர்நாடக அரசு அவ்வப்போது மேகதாது பிரச்சனையை எழுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளது. இது அரசியல் நிர்பந்தத்தினாலோ என்னவோ தெரியவில்லை. எவ்வாறு இருப்பினும் தமிழ்நாடு அரசு மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்காது. கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் அவர்கள் பதவி ஏற்றவுடன் மேகதாது அணை கட்டுவது குறித்து பேசிய செய்திக்கு உடனேயே நான் மறுப்புத் தெரிவித்திருந்தேன்.”

அண்மையில் (30.6.2023 அன்று), கர்நாடக துணை முதல்வர் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தபோது மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி குறித்து பேசியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இது வருந்தத்தக்கது.

கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது. இத்திட்டம் குறித்து, எற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது (17.6.2021, 31.3.2022 மற்றும் 26.5.2022) மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளார்கள்.

நானும், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கும்போதெல்லாம் (6.7.2021, 16.7.2021 மற்றும் 22.6.2022) இக்கருத்தை வலியுறுத்தியுள்ளேன். ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரும் தமிழ்நாட்டின் இசைவில்லாமல் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது எனக் கூறியுள்ளார்கள்.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசு இப்பிரச்சனை குறித்து தொடர்ந்துள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தவிர, மேகதாது அணை திட்டம் குறித்த பொருள் பற்றி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்திய போதெல்லாம் தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, 10.02.2023, 11.04.2023 மற்றும் 16.06.2023 நாட்களில் நடைபெற்ற ஆணையத்தின் கூட்டங்களில் இப்பொருள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இத்திட்டம் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது, வலுவான வாதங்களை முன் வைத்து கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு முறியடிக்கும்.

மேகதாது அணை பிரச்சனை குறித்தும் தக்க நடவடிக்கைகளை இவ்வரசு எடுக்கும் என்பது உறுதி. இப்பிரச்சனையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம்” என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண்க:

நிலத்தை உழவு செய்யும் விநோதமான டிராக்டர்- டீசல், மின்சாரம் எதுவும் வேண்டாம்!

English Summary: We will defeat the attempt to build mekedatu dam says minister duraimurugan Published on: 03 July 2023, 04:51 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.