நல் ஆளுமை உள்ள கிராம ஊராட்சி எனும் கருப்பொருளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற கோயம்புத்தூர் மாவட்டம், பிச்சானூர் ஊராட்சிக்கு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட விருதினை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர் ஊராட்சி நிர்வாகிகள்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ஆம் நாள் தேசிய ஊராட்சிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளைப் பெருமைப்படுத்தும் விதமாக, உள்ளூர் மயமாக்கப்பட்ட நீடித்த, நிலைத்த வளர்ச்சி இலக்குகளை மையப்படுத்தி 9 கருப்பொருட்கள் இனங்காணப்பட்டு, அவற்றில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு ஒன்றிய அரசால் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், 2022-23 ஆம் ஆண்டில் தேசிய அளவில் சிறப்பாக செயல்புரிந்த 27 கிராம ஊராட்சிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில், தமிழ்நாட்டிற்கு நல் ஆளுமை உள்ள கிராம ஊராட்சி எனும் கருப்பொருளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், பிச்சானூர் ஊராட்சிக்கு குடியரசுத் தலைவர் 17.04.2023 அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கி கௌரவித்தார்.
இதனைத்தொடர்ந்து பிச்சானூர் ஊராட்சிக்கு கிடைத்த விருதினை இன்று தலைமைச்செயலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி முன்னிலையில் பிச்சானூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலர் ஆகியோர் முதல்வரிடம் விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த நிகழ்வின்போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் மரு.தாரேஸ் அஹமது, இ.ஆ.ப., பிச்சானூர் ஊராட்சி மன்றத் தலைவர் பொ.மருதாசலம், பிச்சானூர் ஊராட்சி செயலர் திருமதி.வ.உமாமகேஸ்வரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக டெல்லியில் நடைப்பெற்ற விருது வழங்கும் நிகழ்வின் போது, “உள்ளூர் கிராமப்புற பஞ்சாயத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 31.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளில் 46 சதவீதம் பேர் மகளிர் என்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக” குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
மேலும், கிராமப் பஞ்சாயத்துப் பணிகளில் மகளிர் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கான முயற்சிகளில் அவர்களது குடும்பத்தினர் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார்.
அரசின் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளை மட்டும் அமல்படுத்தாமல் புதிய தலைவர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் இடமாக பஞ்சாயத்துகள் திகழ்கின்றன என தெரிவித்தார் குடியரசுத்தலைவர்.
ஒரு பஞ்சாயத்தில் உள்ள சிறந்த நடைமுறைகளை இதர பஞ்சாயத்துகளில் அமல்படுத்தும் போது, நமது கிராமங்களை விரைவாக வளர்ச்சியடையச் செய்து செழுமைப்படுத்த முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
pic courtesy: TNDIPR
மேலும் காண்க:
தினை ஐஸ்கிரீம்- காப்புரிமை மூலம் வருவாய் ஈட்டும் அரசு கல்லூரி!
ஏக்கருக்கு 45 கிலோ யூரியா- குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்ட விவரம்
Share your comments