இந்தியாவில் டிராக்டர் விற்பனையில் முன்னணியில் உள்ள சோனாலிகா நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மட்டும் 10,683 டிராக்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் விவசாய பணிகள் உட்பட பல்வேறு தேவைகளுக்காக டிராக்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீப காலமாக பெரும்பாலான விவசாயிகளின் தேர்வாக உள்ள சோனாலிகா நிறுவனம் கடந்த மாதம் மட்டும் 10,683 டிராக்டர்களை விற்றுள்ளது. இதன் மூலம் விற்பனையில் 14 சதவீத வளர்ச்சியினை எட்டியுள்ளது. தொழில்துறை வளர்ச்சியும் 6.4% ஆக உள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாத விற்பனை மூலம், சோனாலிகா இந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூலை மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் ஒட்டுமொத்தமாக 50,000 டிராக்டர் விற்பனையை தாண்டியுள்ளதாக செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சிறு மற்றும் குறு விவசாயிகள் சுமார் 86% உள்ளனர். இதன் காரணமாக இந்திய விவசாயத்தில் ஒட்டுமொத்த இயந்திரமயமாக்கல் 47% ஆக உள்ளது. இது அமெரிக்கா (95%), பிரேசில் (75%) மற்றும் சீனா (59.5%) போன்ற நாடுகளை விட மிகக் குறைவு. சோனாலிகா டிராக்டர்ஸ், 20- 120 ஹெச்பியில் பரந்த, ஹெவி டியூட்டி தன்மையினை கொண்டிருப்பதால் பெரும்பாலான விவசாயிகளின் விருப்பமான தேர்வாக உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக விவசாயிகள் அனைத்து பண்ணை வேலைகளிலும் வசதியாக மேற்கொள்ளும் வகையில் இந்த டிராக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சோனாலிகா நிறுவனம் இடைத்தரகர்கள், டீலர்களின் மறைமுக கூடுதல் பண வசூலினை தவிர்க்கும் வண்ணம் முழு டிராக்டர் விலை வரம்பையும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காட்சிப்படுத்தியுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பிராண்டின் மீதான நம்பிக்கையினை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட்டின் இணை நிர்வாக இயக்குநர் ராமன் மிட்டல் கூறுகையில், இந்திய விவசாயிகளின் பிராந்தியத் தேவைகளுக்கு ஏற்ப மேம்பட்ட பண்ணை தொழில்நுட்பங்களை விரைவாக மேற்கொள்ளும் வகையில் எங்களது தயாரிப்பு உள்ளது.
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை வழங்குவதே ITL இன் முக்கிய குறிக்கோளாகும். மேலும் இது எங்களால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருக்கும். புதிய வேளாண் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் பண்ணை இயந்திரமயமாக்கலை ஆதரிப்பதை முன்னுரிமையாக கொண்டு செயல்படுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
சோனாலிகா டிராக்டர்ஸ் உலகின் நம்பர் 1 டிராக்டர் உற்பத்தி ஆலையை பஞ்சாபின் ஹோஷியார்பூரில் கொண்டுள்ளது. இந்த ஆலை அதிநவீன ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷனைக் கொண்டுள்ளது. உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு டிராக்டரிலும் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்கிறது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக (2017-2019) 'ஐகானிக் பிராண்ட்' மற்றும் 2021 இல் 'மிகவும் நம்பகமான பிராண்ட்' உள்ளிட்ட மதிப்புமிக்க விருதுகளையும் சோனாலிகா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை- காவிரி விவகாரத்தில் கடுப்பான துரைமுருகன்
Share your comments